கும்மிடிப்பூண்டி அருகே பிரபல ரவுடி பினு உள்பட 2 பேர் கைது மாந்தோப்பில் பதுங்கி இருந்த போது சிக்கினர்
கும்மிடிப்பூண்டி அருகே மாந்தோப்பில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி பினு உள்பட 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு அடுத்த தாணிப்பூண்டியில் உள்ள ஒரு மாந்தோப்பில் ரவுடிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ், பாதிரிவேடு இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது மாந்தோப்பில் 4 ரவுடிகள் மது அருந்தி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். உடனே 2 ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். எனினும் 2 பேரை போலீசார் மடக்கி ப்பிடித்தனர்.
ரவுடி பினு
பிடிபட்டவர்களில் ஒருவர், சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் அரிவாளால் கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ரவுடி பினு (வயது 51) என தெரியவந்தது. போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்து பின்னர் தலைமறைவானார். அவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வந்த பினு தமிழக- ஆந்திர எல்லை பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது சிக்கி உள்ளார்.
மற்றொருவர் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சேர்ந்த ரவுடி ஜெயபிரகாஷ் (23) என்பதும், அவர் மீது 2 கொலை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story