தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட சிக்னல் அமைக்கும் பணி வாகன ஓட்டிகள் அவதி
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சிக்னல் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சிக்னல் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
விபத்துகள்
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் 24 மணி நேரமும் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள், பஸ்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் முத்தையாபுரம் மெயின் பஜாரில் இருந்து துறைமுகம் செல்லும் சாலையில் சில ஊர்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.
இதனால் அந்த சாலையிலும் அடிக்கடி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் பல ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் இருந்து துறைமுகம் செல்லும் சாலை தொடக்கத்தில் போலீஸ் நிழற்குடை அமைக்கப்பட்டு, ஒரு போக்குவரத்து காவலர் பணியில் இருந்தார். ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. பின்னர் சாலை விரிவாக்கத்தின்போது அந்த நிழற்குடை அகற்றப்பட்டது. தற்போது அந்த இடத்தில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் அந்த இடத்தில் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. மக்கள் அந்த சாலையை கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
சிக்னல் அமைக்கும் பணி
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அந்த இடத்தில் சிக்னல் அமைக்கும் பணி தனியார் பங்களிப்புடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சுமார் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் சிக்னல்கள், 12 கண்காணிப்பு கேமராக்கள், தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. ஆனால் அந்த பணி தொடங்கிய வேகத்தில் கிடப்பில் போடப்பட்டது. 2 மாதங்களாக எந்த பணியும் நடக்கவில்லை.
இதனால் அந்த இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே விரைவில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் இருந்து துறைமுகம் செல்லும் சாலை தொடக்கத்தில் சிக்னல் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story