எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டை நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேச்சு


எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டை நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2018 11:00 PM GMT (Updated: 14 Oct 2018 2:53 PM GMT)

சி.பி.ஐ. மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாததால், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டை நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், பிரின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேசிய செயலாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் கடந்த முறை குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். ஆனால் இந்த முறை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியம். அதற்காக இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்காகவும் குரல்கொடுக்கும் தலைவராக ராகுல்காந்தி திகழ்கிறார். ஆனால் அம்பானிக்காகவும், நிரவ் மோடிக்காகவும், மல்லையாவுக்காகவும் பிரதமர் நரேந்திரமோடி உழைக்கிறார்.

நான் ஆட்சிக்கு வந்தால் அரிசி, பருப்பு, பெட்ரோல்–டீசல், கியாஸ் உள்ளிட்டவற்றின் விலையை குறைத்துவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் அவற்றின் விலை இப்போது அதிகரித்து இருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது மோடி பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டார். பா.ஜனதா அரசு அம்பானிக்கு ரபேல் உரிமையை கொடுத்து இருக்கிறார்கள். அதன் மூலம் மக்களின் பணம் எல்லாம் அம்பானியின் பைக்கு செல்லும்.

தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்துக்கு வரவேண்டிய அனைத்து நிதிகளும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு செல்கின்றன. ராகுல்காந்தி தமிழக மக்களுக்காக பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவரது இலக்கு.

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடியே ஆட்டி வைக்கிறார். தமிழகத்தின் ஆட்சி குறித்து கவர்னரே புகார் கூறியிருக்கிறார். குட்கா ஊழல் நடந்திருக்கிறது என்று பெரிய குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

அதோடு மட்டும் அல்லாது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நடத்தலாமா? எனவே அவர் உடனே ராஜினாமா செய்துவிட்டு முறையான விசாரணையை சந்திக்க வேண்டும்.

ஆனால் சி.பி.ஐ., பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக சி.பி.ஐ. மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டை ஐகோர்ட்டு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும். இதைதான் மக்களும் கூறுகிறார்கள்.

தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பெருபான்மையுடன் வெற்றி பெறும் என்று பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளன. 3 மாநிலங்களிலும் வரப்போகும் மாற்றத்தை போன்று தமிழகத்திலும் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

குமரி மாவட்டத்தில் அதிகளவில் பூத் கமிட்டி அமைத்து பாராளுமன்ற தேர்தலுக்காக பாடுபாட வேண்டும். போட்டியாளர்களை ஜெயிக்க வேண்டும் என்றால் நேர்மறையான சிந்தனைகள் கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அருள்பெத்தையா, முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் மாவட்ட தலைவர் ராபர்ட் புரூஸ், மாவட்ட பொருளாளர் பாபு ஆன்டனி நகர தலைவர் அலெக்ஸ்,  மற்றும் வட்டார, நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Next Story