கருணாஸ் மீதான நடவடிக்கை சரியானது தான்: எச்.ராஜாவை கைது செய்வது தமிழக அரசின் கடமை - நடிகர் சரத்குமார் பேட்டி
கருணாஸ் மீதான நடவடிக்கை சரியானது என்றும், எச்.ராஜாவை கைது செய்வது தமிழக அரசின் கடமை என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், கரூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று திண்டுக்கல் வழியாக காரில் சென்றார். திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலையில் அவருக்கு மாவட்ட செயலாளர் நாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்து குற்றம் நிரூபணமானால் அவரை பதவி விலக சொல்வது சரியாக இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் பதவி விலக வேண்டும் என்றால் நாட்டில் எந்த தொழிலும் நடக்காது.
மாநில அரசின் செயல்பாடுகளை மத்திய அரசிடம் எடுத்து சொல்வது தான் கவர்னரின் வேலை. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க முடியும். அரசின் நடவடிக்கை சரியில்லை என்றால் அறிக்கை தரலாம். அரசின் எல்லா விஷயத்திலும் கவர்னர் தலையிடுவது நியாயம் இல்லை.
சிறப்பாக செயல்பட்டாலே 5 வருடத்தில் மக்களின் அனைத்து பிரச்சினையையும் தீர்ப்பது கடினம். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 2 வருடங்களில் எதுவும் செய்ய இயலாது. எனவே, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். தவறாக பேசுபவர்கள், மக்களை தூண்டிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணாசை கைது செய்தது சரிதான்.
இதேபோல எச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும். இது மாநில அரசின் கடமை. ஜெயலலிதா இருந்தபோது, அமைச்சர்கள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது, அவர்கள் பேசும்போது சில தவறான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இதனை, அமைச்சர்கள் உணர்ந்து சரிசெய்தால் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல, வேடசந்தூரில் திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது, காரில் நின்றவாறு சரத்குமார் பேசுகையில், ‘வருகிற தேர்தலில் தொண்டர்களின் எண்ணங்களின்படி சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும். 27 ஆண்டுகால அரசியலில் உள்ளோம். தமிழக மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறோம். நம்முடைய வாக்கு வங்கி என்ன என்பதை நிரூபிக்கவேண்டும். வருங்காலத்தில் மக்களுக்காக இறங்கி போராடினால்தான் அந்த வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள முடியும். காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், அமைதியாக ஓடுகின்ற ஆறுகளின் ஆழம் அதிகமாக இருக்கும். அதுதான் சமத்துவ மக்கள் கட்சி’ என்றார்.
முன்னதாக, கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி பிரிவில் சரத்குமாருக்கு சால்வை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெர்மன்ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story