நெல்லை தாமிரபரணி ஆற்றில் நடிகை கஸ்தூரி புனித நீராடினார் ‘பெண்களுக்கு விரைவில் சமநீதி கிடைக்கும்’ என பேட்டி
நெல்லை தாமிரபரணி ஆற்றில் நடிகை கஸ்தூரி நேற்று புனித நீராடினார். அப்போது அவர், பெண்களுக்கு விரைவில் சமநீதி கிடைக்கும் என்று கூறினார்.
நெல்லை,
நெல்லை தாமிரபரணி ஆற்றில் நடிகை கஸ்தூரி நேற்று புனித நீராடினார். அப்போது அவர், பெண்களுக்கு விரைவில் சமநீதி கிடைக்கும் என்று கூறினார்.
நடிகை கஸ்தூரி
தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி நடிகை கஸ்தூரி நேற்று மதியம் நெல்லைக்கு வந்தார். அவர் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். அவருடன் மகள் சோபினியும் நீராடினார். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் யாகசாலை பூஜையிலும் கலந்து கொண்டார்.
பின்னர் நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாலியல் பிரச்சினைகள்
விருச்சிக ராசிக்கு உரிய நதி தாமிரபரணி ஆகும். இங்கு 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா புஷ்கர விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபற்றி எனக்கு தெரியாமல் இருந்தது. சினிமா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இங்கு வந்து புனித நீராடிய பிறகே தாமிரபரணி மகா புஷ்கர விழா சிறப்பு பற்றி தெரிந்து கொண்டேன். என்னுடைய ராசியும் விருச்சிக ராசிதான். அதனால் தாமிரபரணி ஆற்றில் நீராடி உள்ளேன்.
பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதற்கான தீர்வு குறித்து முடிவு எடுக்க வேண்டும். குறிப்பிட்ட துறையில் மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் உள்ளன.
பெண்களுக்கு சமநீதி
தற்போது இந்த பிரச்சினைகள் ‘மீ டூ‘ இயக்கம் மூலம் வெளிவருகிறது. வீட்டுக்குள் பெண்கள் முடங்கி கிடந்த காலம் மாறிவிட்டது. சமூகத்தில் எல்லா நிலைகளிலும் பெண்கள் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க ஏற்கனவே சட்டங்கள் உள்ளன. அவை கடுமையாக்கப்பட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். பெண்களுக்கு விரைவில் சமநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறினார்.
Related Tags :
Next Story