தாமிரபரணி மகா புஷ்கர விழா: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் புனித நீராடினர்


தாமிரபரணி மகா புஷ்கர விழா: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் புனித நீராடினர்
x
தினத்தந்தி 15 Oct 2018 3:30 AM IST (Updated: 14 Oct 2018 11:53 PM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் புனித நீராடினர்.

நெல்லை, 

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் புனித நீராடினர்.

மகா புஷ்கர விழா

தாமிரபரணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தக்கட்டங்களில் புனித நீராடி வருகின்றனர். காலை மற்றும் மாலையில் தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்ற வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லைக்கு வந்த ரெயில்கள், பஸ்களில் ஏராளமான வெளியூர் மக்கள் வந்தனர். இதுதவிர கார், வேன்களிலும் ஏராளமானோர் வந்தனர்.

கூட்டம் அலைமோதியது

நெல்லையில் சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறை, மேலநத்தம் அக்னி தீர்த்த கட்டம், சிந்துபூந்துறை சப்த தீர்த்த கட்டம், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை அருகில் உள்ள ஜடாயு துறை, மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஒருசில இடங்களில் போலீசார் அனுமதித்த இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், சிலர் ஆற்றில் பரவலாக அனைத்து இடங்களிலும் குளித்தனர். மேலும் எச்சரிக்கை தடுப்பு வேலியை கடந்தும் ஆற்றுக்குள் சென்று குளித்தனர். தாமிரபரணி ஆற்றில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. அவர்கள் ஆங்காங்கே ஆற்றங்கரையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். ஒருசிலர் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி தண்ணீரில் விட்டனர். ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு மக்கள் வந்திருந்தனர்.

தண்ணீர் திறப்பு குறைப்பு

நேற்று கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டதையொட்டி தாமிரபரணி ஆற்றில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டு இருந்தது. தாமிரபரணி ஆற்றங்கரைகளில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்பட்டிருந்தன.

தைப்பூச மண்டப படித்துறையில் நேற்று காலை வேத பாராயணம், ஹோமங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற்றது. இதிலும் பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை குறுக்குத்துறையில் முதியவர்களை கோவில் நுழைவு வாசல் பகுதியில் இருந்து ஆற்றங்கரை வரை பேட்டரி காரில் அழைத்து செல்ல நெல்லை மாநகராட்சி சார்பில் 2 பேட்டரி கார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் முதியவர்கள் உற்சாகத்துடன் அமர்ந்து பயணம் செய்தனர்.

மேலதிருவேங்கடநாதபுரம்

நெல்லை அருகே உள்ள மேலதிருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் உள்ள சீனிவாச தீர்த்த கட்டத்தில் நேற்று மகா புஷ்கர விழாவையொட்டி அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இங்கு பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் அங்குள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள் பகுதியில் நேற்று கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஆற்றுக்கு வந்த மக்கள் மற்றும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தினர். நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் இருந்து தைப்பூச மண்டபத்துக்கு ஒருசில அமைப்பினர் ஊர்வலமாக செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, ஊர்வலமாக செல்ல தடை விதித்தனர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கைலாசபுரத்துக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

இதேபோல் பழனியில் இருந்து முருக பக்தர்கள் குறுக்குத்துறை படித்துறைக்கு வந்தனர். அவர்கள் ஆன்மிக புத்தகங்கள், துண்டுபிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர். இதைக்கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, விசாரணைக்கு அழைத்தனர். இதை அறிந்த பாரதீய ஜனதா கட்சியினர், இந்து முன்னணியினர் அங்கு வந்து முருக பக்தர்களுக்கு ஆதரவாக பேசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாபநாசம்

பாபநாசத்தில் அகில பாரத துறவியர் சங்கம் சார்பில் தினந்தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்து வருகிறது. மேலும் சித்தர் கோட்டம் சார்பிலும் வழிபாடுகள் நடந்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாலை முதலே மக்கள் அதிகளவில் வந்தனர். பாபநாசம் படித்துறையில் நீராடுவதற்கு, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர். பின்னர் பாபநாச சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் பக்தர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போலீசார் திணறினர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள், முதியவர்கள் மற்றும் கைக்குழந்தையுடன் ஏராளமானவர்கள் புஷ்கர விழாவில் கலந்துகொண்டனர். பாபநாசம் வந்த மக்கள் குடும்பம் குடும்பமாக கோவில் அருகே அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிடுவது, வழிநெடுகிலும் துறவியர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது மற்றும் தன்னார்வலர்கள் தீர்த்தம் வழங்குவது, அதனை கைகளில் வாங்கி குடிப்பது போன்றவை நடந்து வருகிறது. பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானங்களும் நடைபெற்று வருகிறது.

அம்பை-சேரன்மாதேவி

அம்பை காசிநாத சுவாமி கோவில் படித்துறையில் நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் சிறப்பு ஆரத்தி காண்பித்தனர்.

இதேபோல் வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூர் நாறும்பூநாத கோவில் படித்துறை, சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வியாச தீர்த்த கட்டம், சோமச தீர்த்தம், உரோமச தீர்த்த கட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடந்து வருகிறது. இங்கு ஏராளமானோர் புனித நீராடி செல்கின்றனர்.

2 லட்சத்து 38 ஆயிரம் பேர்

போலீஸ் கணக்கெடுப்பின்படி, நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் புனித நீராடி உள்ளனர். நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ள 25 படித்துறைகளிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேரும், நெல்லை மாநகரில் உள்ள 4 படித்துறைகளில் 25 ஆயிரம் பேரும் புனித நீராடி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல் உள்ளிட்ட 29 இடங்களில் உள்ள படித்துறைகளில் நேற்று மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து புனித நீராடினர். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 500 பேர் நீராடினர். இதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 500 பேர் புனித நீராடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story