கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்


கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்
x
தினத்தந்தி 15 Oct 2018 4:15 AM IST (Updated: 14 Oct 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

எனது 50-வது பிறந்தநாளின்போது குடிபோதையில் கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்துவிட்டனர் என பிரபல ரவுடி பினு போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.

கும்மிடிப்பூண்டி,

சென்னை மாங்காடு பகுதியில் அரிவாளால் கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல ரவுடி பினு (வயது 51). போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழக-ஆந்திர எல்லையில் தலைமறைவாக இருந்தனர்.

ரவுடி பினுவையும், அவரது நண்பரான வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த ரவுடி ஜெயபிரகாசையும் (23) நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள தாணிப்பூண்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பண்ணை வீட்டையொட்டிய மாந்தோப்பில் மது குடித்து கொண்டிருந்தபோது பாதிரிவேடு போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் ரவுடி பினு அளித்த வாக்கு மூலம் வருமாறு:-
என்னுடைய 50-வது பிறந்த நாளை பூந்தமல்லி அடுத்த மலையப்பாக்கம் பாலத்தின் கீழ் கொண்டாடியபோது, நான் குடிபோதையில் கத்தியால் கேக் வெட்டினேன்.

அந்த புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர். நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை. இதனையடுத்து என்னை போலீசார் தேடி வந்தனர். போலீசாரின் தேடுதலுக்கு பயந்து போன நான், மாங்காடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன்.

இந்த நிலையில் வழிப்பறி வழக்கு தொடர்பாக புழல் சிறையில் அடைக்கப்பட்டேன். ஜாமீனில் வெளியே வந்தவுடன், மீண்டும் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று பயந்து வேளாங்கண்ணி கோவிலிலும், திருப்பதி மலைக்கோவிலிலும் தங்கி இருந்தேன்.

எனக்கு வேலூர் சிறையில் இருந்தபோது அங்கு இருந்த பிரகாஷ் என்ற ஜெயபிரகாசுக்கும் (23) எனக்கும் நட்பு ஏற்பட்டது. அவனும் நானும், ஆந்திர மாநிலம் சத்யவேடு பகுதியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்து வந்தோம். இதுதவிர பாதிரிவேடு அருகே உள்ள தாணிப்பூண்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் யாருக்கும் தெரியாமல் பொழுதை கழித்து வந்தோம்.

எங்களிடம் குடிக்க பணம் இல்லாததால் தாணிப்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவரை கத்தி முனையில் மடக்கி அவரிடம் இருந்து ரூ.500-ஐ பறித்தோம்.

முதலில் பணத்தை தர அவர் மறுத்தார். அவரது கழுத்தில் கத்தியை வைத்து அவரை கொலை செய்ய முயற்சித்தோம். அப்போது நாங்கள் யார் தெரியுமா? பிரபல ரவுடிகள் பினு மற்றும் பிரகாஷ் என கூறி அவரது கன்னத்தில் அறைந்தோம். இதனையடுத்து போலீசில் சிக்கினோம். இவ்வாறு ரவுடி பினு தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

இந்த நிலையில் போலீஸ் பிடியில் சிக்கிய பினு மற்றும் அவரது நண்பர் ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது கூட்டுக்கொள்ளை, கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை பொன்னேரி கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story