கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை - தாசில்தார் தகவல்


கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை - தாசில்தார் தகவல்
x
தினத்தந்தி 15 Oct 2018 3:15 AM IST (Updated: 15 Oct 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்துள்ளார்.

கீழக்கரை,

கீழக்கரை தாலுகாவில் கீழக்கரை நகராட்சி மற்றும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் முதியோர் ஓய்வூதியம், சாதி, வருமான சான்றிதழ், பட்டா உள்ளிட்ட தேவைகளுக்கு கீழக்கரை தாலுகா அலுவலகம் தான் வரவேண்டும். இவ்வாறு வருபவர்களிடம் இடைத்தரகர்கள் அரசு சான்றிதழ் பெற விண்ணப்பம் எழுதி தருவதாக அழைத்து பேரம் பேசுகின்றனர்.

பணம் கொடுத்தால் 10 நாட்களில் சான்றிதழை அலைச்சல் இல்லாமல் பெற்று தருகிறோம் என்று கூறி விவரம் தெரியாத நபர்களிடம் பணத்தை கறந்து விடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரைக்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் தாலுகா அலுவலகத்தில் சுற்றித்திரியும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து விட்டு சென்றார். இந்நிலையில் தற்போது மீண்டும் இடைத்தரகர்களின் தொந்தரவு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து தாசில்தார் ராஜேசுவரியிடம் கேட்டபோது, கீழக்கரை தாலுகாவில் தினசரி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நேரடியாக உரிய நாட்களுக்குள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற நேரடியாக அலுவலகங்களை அணுகலாம்.

இதுபோன்று அரசு அலுவலகங்கள பெயரில் பணம் பெற்று ஏமாற்றும் இடைத்தரகர்கள் பற்றி தகவல் அளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story