ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் சாவு


ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 15 Oct 2018 3:30 AM IST (Updated: 15 Oct 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள சிகரலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். தனியார் கிரானைட் ஊழியர். இவருடைய மகன் யோகஅகிலன் (வயது 7). இவன் பென்னாகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் யோகஅகிலன் அதேபகுதியை சேர்ந்த நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட ஊரில் மையப்பகுதியில் உள்ள மைதானத்திற்கு சென்றான்.

அப்போது கிரிக்கெட் விளையாடிய போது பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது. இதனால் பந்தை எடுப்பதற்காக மாணவன் யோகஅகிலன் சென்றான். அப்போது மைதானத்தின் அருகில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான 60 அடி ஆழ திறந்தவெளி கிணற்றில் மாணவன் தவறி விழுந்தான். இதை கண்ட நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவனை மீட்க முயன்றனர்.

இந்த கிணறு ஆழமாக இருந்ததால் அவர்களால் மாணவனை மீட்க முடியவில்லை. சிறிது நேரத்தில் மாணவன் யோகஅகிலன் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான். இதுகுறித்து ஏரியூர் போலீசாருக்கும், பென்னாகரம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால் கிணற்றில் 25 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் மீட்பு பணி தடைபட்டது.

இதையடுத்து மின்மோட்டார் வைத்து கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றி விட்டு மாணவனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் விழுந்து மாணவன் இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.


Next Story