மோட்டார் சைக்கிள்- கார் மோதல்: வியாபாரி உள்பட 2 பேர் பலி திருச்செந்தூர் அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள்- கார் மோதல்: வியாபாரி உள்பட 2 பேர் பலி திருச்செந்தூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 15 Oct 2018 3:00 AM IST (Updated: 15 Oct 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள், கார் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள், கார் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர்.

வியாபாரி

திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் நடு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் கனிஅரசன் (வயது 21). இவர் திருச்செந்தூர் கோவில் வாசலில் வியாபாரம் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் வீரமுத்து (17). இவர் திருச்செந்தூர் அரசு ஆண்கள் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் நேற்று இரவு திருச்செந்தூர்- நெல்லை சாலையில் மோட்டார் சைக்கிளில் தங்கள் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் திருச்செந்தூரை தாண்டி காந்திபுரம் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். இந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

2 பேர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கனிஅரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். வீரமுத்து படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த வீரமுத்துவை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் அங்கு சிறிது நேரத்தில் உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story