தாமிரபரணி புஷ்கர விழாவில் மதநல்லிணக்கம்: முஸ்லிம், கிறிஸ்தவர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு


தாமிரபரணி புஷ்கர விழாவில் மதநல்லிணக்கம்: முஸ்லிம், கிறிஸ்தவர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 15 Oct 2018 3:30 AM IST (Updated: 15 Oct 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தாமிரபரணி புஷ்கர விழாவில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சேரன்மாதேவி, 

மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தாமிரபரணி புஷ்கர விழாவில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சிறப்பு தொழுகை

நெல்லை அருகே உள்ள மேலச்செவல் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டத்தில் மகா புஷ்கர விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இங்கு நேற்று முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலச்செவல், சொக்கலிங்கபுரம் முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகையும், மதநல்லிணக்க கூட்டு பிரார்த்தனையும் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், ராஜன் பண்ணையார், அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், மேலச்செவல் ஜமாத் தலைவர் நயினா முகமது, சொக்கலிங்கபுரம் ஜமாத் தலைவர் ரியாவுதீன், தாமிரபரணி புஷ்கர குழு ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன், வக்கீல் கண்ணன் மற்றும் முஸ்லிம், இந்து மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மற்றும் பெங்களூருவில் வசிக்கும் மேலச்செவலை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வந்து கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் அனைவரும் ஆற்றில் புனித நீராடினர். இதுதொடர்பாக ஜமாத் நிர்வாகிகள் கூறுகையில், “தாமிரபரணி ஆறு மனிதர்கள் உள்பட பல்லுயிர்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. எனவே இந்த ஆறு தொடர்ந்து வற்றாமல் ஓடி கொண்டே இருக்க வேண்டும் என்று தொழுகை நடத்தி உள்ளோம்” என்றனர்.

கிறிஸ்தவர்கள்

மாலையில் கிறிஸ்தவர்கள் மேலச்செவல் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, கூட்டு பிரார்த்தனை நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அனைத்து சமுதாய மக்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். மேலும் தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி பூஜையும் நடைபெற்றது.

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி மேலச்செவல் வேன், ஆட்டோ டிரைவர்கள் சார்பில் பஸ் நிறுத்தத்தில் இருந்து தாமிரபரணி ஆறு வரை இலவசமாக ஆட்டோ, வேன்களை இயக்கினர்.

Next Story