தாழ்த்தப்பட்ட சமையலர் பணி செய்ய எதிர்ப்பு: பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை - கலெக்டர் ரோகிணி பேட்டி
தாழ்த்தப்பட்ட சமையலர் பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஒன்றியம் கே.மோரூரை சேர்ந்தவர் சிவராஜ். முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர். இவருடைய மனைவி ஜோதி. இவர் பதவி உயர்வு மூலம் சத்துணவு சமையலராக கே.மோரூர் குப்பன் கொட்டாய் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளியில் சமைக்க கூடாது எனவும், அப்படி சமைத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் எனவும் சிலர் அவர் சமையல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதில், இந்த சம்பவம் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதன்பேரில் போலீசார் தலைமை ஆசிரியர் சேகர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமை ஆசிரியர் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறுகையில், குப்பன் கொட்டாய் பள்ளி விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்க கூடாது என்பதற்காக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீண்டாமை பிரச்சினை குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story