நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு: நகராட்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தை திடீர் சாவு
நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தை திடீரென இறந்தது. டாக்டர் பணியில் இல்லாததால் இறந்ததாக கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அண்ணாநகரை சேர்ந்தவர் பிரமானந்தன் (வயது 32). தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா(25). இவர்களுக்கு 3 வயதில் யுவான் என்கிற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கவிதா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கவிதா, நெல்லிக்குப்பம் நகராட்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறிது நேரத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் தாய்ப்பால் குடிக்காமல் குழந்தை அழுது கொண்டே இருந்தது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த டாக்டர், செவிலியர்களிடம் உறவினர்கள் இது பற்றி கேட்டனர். அதற்கு குழந்தை பிறந்து சில மணி நேரம் கழித்து தான் தாய்ப்பால் குடிக்கும். கவலைப்பட தேவையில்லை என்று கூறி சென்று விட்டனர். இருப்பினும் குழந்தை இரவு முழுவதும் பால் குடிக்கவில்லை. மேலும் இது பற்றி தெரிவிக்க இரவில் டாக்டர், செவிலியர்கள் யாரும் இல்லை. பிரசவ வார்டு பெண் ஊழியர் ஒருவர் மட்டுமே அங்கு இருந்தார்.
நேற்று காலையும் அந்த குழந்தை விட்டு, விட்டு அழுது கொண்டே இருந்தது. மதியத்துக்கு பிறகு அந்த குழந்தை அசைவின்றி கண்களை மூடியபடி இருந்தது. இதனால் பயந்து போன கவிதா மற்றும் அவரது உறவினர்கள் இது பற்றி டாக்டர், செவிலியர்களிடம் சொல்வதற்காக சென்றனர். ஆனால் அப்போதும் அவர்கள் பணியில் இல்லை. பெண் ஊழியர் மட்டுமே இருந்தார். அவரிடம் அவர்கள் இது பற்றி கூறியபோது, அவர் வந்து பார்த்து விட்டு குழந்தை தூங்குவதாக கூறிச் சென்றார்.
பின்னர் கவிதாவின் உறவினர்கள் சத்தம் போட்டதால், அந்த குழந்தையை இன்குபேட்டரில் பெண் ஊழியர் வைத்து பார்த்தார். அப்போது அந்த குழந்தையின் நாடித்துடிப்பு படிப்படியாக குறைந்தது. இது பற்றி அந்த ஊழியர் டாக்டருக்கு தெரிவித்தார். இதற்கிடையில் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து, அந்த குழந்தையை மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது அந்த குழந்தை இறந்து விட்டது தெரிந்தது.
இதை அறிந்ததும் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பெண் ஊழியரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் நகராட்சி மருத்துவமனையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இருப்பினும் நகராட்சி டாக்டர், செவிலியர்கள் யாரும் வரவில்லை.
சம்பவம் பற்றி அறிந்ததும் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் மாலை 4 மணி முதல் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இரவு 9.30 மணி வரை நடந்தது. அப்போது உறவினர்கள் கூறுகையில், நகராட்சி மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இல்லை. பணியில் இருந்தபோதிலும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. அவர்களது அலட்சியத்தால் தான் குழந்தை இறந்தது. வரும் காலங்களில் இதுபோன்று நடக்கக்கூடாது என்றனர்.
அதற்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, டாக்டர் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாதது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தாசில்தார் ஆறுமுகம், மருத்துவமனையில் 24 மணி நேரமும் ஒரு டாக்டர் மற்றும் செவிலியர்கள் பணியில் இருக்க உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story