லஞ்ச வழக்கில் கைதான: ஊராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்


லஞ்ச வழக்கில் கைதான: ஊராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 15 Oct 2018 1:05 AM IST (Updated: 15 Oct 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

லஞ்ச வழக்கில் கைதான திருநாவலூர் ஊராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விழுப்புரம், 


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 28), விவசாயி. இவருக்கு சொந்தமான விளை நிலத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வரப்பு சீர் செய்ய திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அந்த நிலத்தில் வரப்பு சீர் செய்யும் பணியை மேற்கொள்ள ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த குமார் சம்பவத்தன்று திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்த பணி மேற்பார்வையாளர் வேலுவை சந்தித்து, வரப்பு சீர்செய்தல் பணிக்காக தனக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் குறித்து கேட்டார்.

அதற்கு பணி மேற்பார்வையாளர் வேலு, வரப்பு சீர்செய்தல் பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்தை தரவேண்டுமானால் தனக்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறினார்.

அதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய ஆலோசனையின்படி கடந்த 12-ந்தேதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்த வேலுவிடம் வரப்பு சீர்செய்தல் பணிக்காக தனக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்தை தருமாறு கூறி தான் கொண்டு வந்திருந்த ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது அந்த பணத்தை வேலு வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வேலுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் வேலுவை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மகேந்திரன் உத்தர விட்டுள்ளார்.

Next Story