நெல்லை மாநகராட்சி சார்பில் தாமிரபரணி படித்துறைகளில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஆணையாளர் நாராயண நாயர் தகவல்
நெல்லை மாநகராட்சி சார்பில் தாமிரபரணி படித்துறைகளில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன என்று மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி சார்பில் தாமிரபரணி படித்துறைகளில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன என்று மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
அடிப்படை வசதிகள்
தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படி நெல்லை மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட மேலநத்தம் ஆணையப்ப சாஸ்தா கோவில் படித்துறை, கைலாசபுரம் தைப்பூச மண்டபம் படித்துறை, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறை, பேராட்சி அம்மன் கோவில் படித்துறைகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த படித்துறைகளில் புனித நீராடும் பக்தர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தலா 5 குடிநீர் தொட்டிகள், ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் நடமாடும் கழிவறைகள், பெண்கள் உடைமாற்றும் அறைகள் மற்றும் ஈரத்துணிகளை ஆற்றில் போடுவதை தவிர்க்கும் வகையில் வலைப்பின்னல் பெட்டிகள் மற்றும் குப்பை தொட்டிகள் தேவையான அளவுக்கு வைக்கப்பட்டு உள்ளன.
மருத்துவ உதவி மையம்
மேலும் இந்த படித்துறைகளில் தலா ஒரு தற்காலிக மருத்துவ உதவி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர நடமாடும் கழிவறைகளில் உள்ள தொட்டிகள் நிரம்பி விட்டால் அதனை உறிஞ்சி எடுத்து அப்புறப்படுத்தும் வகையில் டேங்கர் லாரியும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தேவையான பணியாளர் அடங்கிய நடமாடும் மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அன்னதானம் நடைபெறும் படித்துறைகளில், குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்ப குடிநீர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன.
100 துப்புரவு பணியாளர்கள்
படித்துறை, அங்கு செல்லும் பாதை, பக்தர்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பிளச்சிங் பொடி, சுண்ணாம்பு, பினாயில் தெளித்து தொடர்ந்து துப்புரவு மற்றும் தூய்மை பணியில் 100 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். தாமிரபரணி மகா புஷ்கர விழா முடிவடையும் வரை மாநகர எல்லைக்கு உட்பட்ட படித்துறை பகுதிகளை தூய்மையாக பராமரிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story