நெல்லையில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பு அதிகாரி ஆய்வு
நெல்லையில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பு அதிகாரி அதுல் ஆனந்த் நேற்று ஆய்வு செய்தார்.
நெல்லை,
நெல்லையில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பு அதிகாரி அதுல் ஆனந்த் நேற்று ஆய்வு செய்தார்.
சிறப்பு அதிகாரி
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு அதிகாரியும், தமிழக பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையருமான அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், அதுல் ஆனந்த் கூறியதாவது:-
கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு இந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம்களும் நடைபெற்றது.
46,946 விண்ணப்பங்கள்
நெல்லை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கு 46,946 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வளாக தூதர் (கேம்பஸ் அம்பாசிடர்) நியமிக்கப்பட்டு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் அந்த கல்லூரி மாணவர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கிராமப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று அவர்களிடம் சிறப்பு முகாம் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளதா? என்பதை அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் சரிபார்த்து கொள்ளலாம். மேலும், தேர்தல் தொடர்பான விவரங்களை, அதாவது வாக்காளர் வரிசை எண், வாக்குச்சாவடி மையத்தின் பெயர், வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடம், வாக்குச்சாவடியில் உள்ள வசதிகள் ஆகியவற்றை www.nvsp.in மற்றும் www.tiru-n-e-lv-e-li.nic.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் ஆகாஷ் (சேரன்மாதேவி), மைதிலி (நெல்லை), ராஜேந்திரன் (தென்காசி), கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ்குமார் (பொது), சாந்தி (தேர்தல்), நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர், தேர்தல் தாசில்தார் தங்கராஜ் உள்பட அனைத்து தாசில்தார்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு முகாம்களில் ஆய்வு
இதை தொடர்ந்து பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி மற்றும் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்களை அதுல் ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் நெல்லை அருகே உள்ள பொன்னாக்குடி கிராமத்தில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story