கவர்னர் மாளிகையை பலகீனமாக்க நினைக்கிறார்: நாராயணசாமியால் வெற்றி பெற முடியாது - கிரண்பெடி ஆவேசம்
கவர்னர் மாளிகையை பலகீனமாக்கும் நினைக்கும் முதல்–அமைச்சர் நாராயணசாமியால் வெற்றி பெற முடியாது என கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
சமூக பொறுப்புணர்வு நிதியை (சி.எஸ்.ஆர்) பயன்படுத்தி புதுச்சேரி கவர்னர் மாளிகை அதிகாரிகள் முறைகேடாக பணம் வசூல் செய்து வருவதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார். அதற்கு கவர்னர் கிரண்பெடி மறுப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி மாநிலத்தை நீர்வளம் மிக்க மாநிலமாக மாற்றுவது முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு விருப்பமில்லை என நினைக்கிறேன். நிதிப் பற்றாக்குறை காரணமாக புதுச்சேரியில் 84 கி.மீ. தொலைவிலான நீர்வரத்து பகுதிகளில் நீண்டகாலமாக தூர்வாராததால் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பிரதான ஆறுகள், 84 ஏரிகள், 600 குளங்கள் பாதிக்கப்படும் நிலையில் இருந்தன.
கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது புதுச்சேரி கால்வாய்களில் முறையாக தண்ணீர் வெளியேறவில்லை. கொடையாளர்களை அணுகி ஒப்பந்ததாரர்களுக்கு நேரடியாக நிதி வழங்கி நீர்வழித்தடங்களை சீரமைக்கும் பணியை கவர்னர் மாளிகை நடவடிக்கை எடுத்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவ காலத்தில் நல்ல மழை இருக்கும் என்பதால் புதுச்சேரியில் நீர்வளத்தை பெருக்க இதுபோன்ற நல்ல முயற்சி எடுத்தது. நீர்நிலைகளை தூர்வார உதவியவர்களை கவுரவிக்கும் வகையில் அடுத்த மாதம் (நவம்பர்) 3–ந் தேதி கவர்னர் மாளிகையில் விழா நடக்கிறது.
அப்போது இதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் ஆவணப்படுத்தப்படும்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் திறமைமிகுந்த தேவநீதி தாஸ் கவர்னரின் சிறப்பு அதிகாரியாகபணியாற்றி வருகிறார். அவர் மத்திய அரசின் ஒப்புதலுடன் பணி அமர்த்தப்பட்டு உள்ளார். அவர், பணிக்காலத்தில் நேர்மையாகவும், திறமையாகவும் செயல்பட்டுள்ளார்.
அவரை இடமாற்றுவதற்கு புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி முயற்சிகளை மேற்கொண்டார். அதேபோல் அவரது பதவி உயர்வை பறிக்க அவருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஓராண்டிற்கு முன்பு அவரை புதுச்சேரியை விட்டு வெளியே இடமாற்றம் செய்யவும் முயற்சி நடந்தது.
புதுச்சேரி கவர்னர் மாளிகையை பலகீனமாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முதல்–அமைச்சர் நாராயணசாமியின் முயற்சிகள் பலிக்கவில்லை. எதிர் காலத்திலும் அவரால் வெற்றி பெற முடியாது.
முதல்–அமைச்சர் நாராயணசாமி தேவையில்லாத விவகாரத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு அவருடைய அலுவலகத்தில் பல மாதங்களாக தேங்கிக் கிடக்கும் கோப்புகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.