14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்


14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்
x
தினத்தந்தி 14 Oct 2018 10:45 PM GMT (Updated: 14 Oct 2018 9:05 PM GMT)

ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்பாடு தொடர்பாக 14 ஆண்டுகளுக்கு முன் எச்சரிக்கை செய்யப்பட்டும் திருச்சி விமான நிலையம் மேம்படுத்தப்படவில்லை. விபத்து தொடர்பாக பொதுமக்கள் முன் கேள்விகள் எழுந்து உள்ளன.

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அக்டோபர் 12-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து எழும்பி மேலே பறக்க முயன்றபோது விமானங்கள் இயக்கத்துக்கு வழிகாட்டும் ஆண்டெனா கருவிகள், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் மீது மோதி, அதன் அருகில் இருந்த சுற்றுச்சுவரையும் இடித்து தள்ளி விட்டு பறந்தது. ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்ட நான்கே நிமிடங்களில் அதாவது 1.19 மணிக்கு இந்த விபத்து நடந்து உள்ளது. சுற்றுச்சுவரை இடித்து தள்ளியதில் விமானத்தின் அடிப்பகுதி மற்றும் பின் சக்கரங்கள் லேசாக சேதம் அடைந்து உள்ளன.

ஆனால் விமானம் எந்தவித பிரச்சினையும் இன்றி மும்பை வரை பறந்ததால் அதில் பயணித்த 130 பயணிகளும், விமானி, துணை விமானி மற்றும் விமான ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். மாறாக இந்த விமானம் விபத்தில் சிக்கி இருந்தால் 136 பயணிகளின் உயிரும் கேள்விக்குறியாகி திருச்சி வரலாற்றில் அது ஒரு கரும்புள்ளி நாளாக இடம் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கும்.

விமானம் சுற்றுச்சுவரில் மோதியது, ஆண்டெனா கருவிகளை சேதப்படுத்தியது தொடர்பாக சென்னையில் இருந்து விமான நிலைய ஆணைய குழும அதிகாரிகள் திருச்சிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விபத்து நடந்த ஓடுபாதையின் கடைசி பகுதி, ஆண்டெனாக்கள் உள்ள இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் வான் கட்டுப்பாட்டு அறையில் சம்பவம் நடந்த போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து பொது இயக்குனரக அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) திருச்சி வருகிறார்கள். இந்த குழுவினர் தான் ஏற்கனவே மும்பையில் பிரச்சினைக்குரிய விமானம் தரை இறக்கப்பட்டதும் அதனை இயக்கிய விமானி கணேஷ்பாபு, துணை விமானி அனுராக் ஆகியோரிடம் விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

எனவே இந்த குழுவினரின் விசாரணைக்கு பின்னரே திருச்சி விமான விபத்துக்கான காரணம் பற்றிய முழு விவரமும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த சம்பவத்திற்கு பின்னர் திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பாக பொது நல ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

திருச்சி விமான நிலையம் சென்னைக்கு அடுத்த படியாக உள்ள பெரிய விமான நிலையம் என்பது மட்டும் அல்ல. மிகவும் பழமையான விமான நிலையமும் கூட. திருச்சி விமான நிலையத்தின் வரலாறு என்பது நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தொடங்குகிறது. அதாவது இரண்டாவது உலகப்போர் நடந்த கால கட்டத்தில் போர் விமானங்களை நிறுத்துவதற்கும், அவற்றிற்கு எரிபொருள் நிரப்புவதற்காகவும் ராணுவ விமான தளமாக இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. போர் முடிந்து நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தான் இந்த விமான நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான சிவில் விமான நிலையமாக மாற்றம் செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் ஷார்ஜா, சிங்கப்பூருக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டன. ஒரு வாரத்துக்கு 10 முதல் 14 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்த திருச்சி விமான நிலையத்தில் இருந்து தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் பயணிகள் திருச்சி விமான நிலையத்தின் மூலம் தங்களது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களை தொடர்ந்து வருகிறார்கள். இதன் மூலம் திருச்சி விமான நிலையத்தின் வருவாயும் அதிகரித்து இந்திய அளவில் வளர்ந்து வரும் விமான நிலையங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஆனால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கும் அளவிற்கு ஓடுபாதை விரிவாக்கம், மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தியாகும். ஒரு விமான நிலையத்தின் உயிர்நாடியே ரன்வே எனப்படும் அதன் ஓடுபாதை தான். ஓடு பாதை நீளமாக இருந்தால் தான் அதிக அளவில் பயணிகளை சுமந்து செல்லக்கூடிய ஏர் பஸ் மற்றும் போயிங் ரக விமானங்களை இயக்க முடியும். ஆனால் திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையின் தற்போதைய நீளம் 8,136 அடிகள் ஆகும். இதனை 12 ஆயிரத்து 500 அடியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது பல ஆண்டு திட்டமாகும். ஆனால் பல்வேறு முட்டுக்கட்டைகளால் ஓடுபாதை விரிவாக்கப்பணியானது இதுவரை நிறைவேற்றி முடிக்கப்படவில்லை.

திருச்சி விமான விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்றாலும் ஓடுபாதையின் அளவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. விமானத்தை இயக்கிய விமானி ஓடுபாதையில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட தூரத்தையும் தாண்டி மேலே பறக்க முயன்றதும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. எனவே ஓடுபாதையின் நீளத்தை ஏற்கனவே நீட்டிப்பு செய்து இருந்தால் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்காது.

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது கடந்த 2004-ம் ஆண்டு போயிங் 737 ரக விமானத்தில் திருச்சிக்கு வந்தார். அந்த விமானம் திருச்சியில் இருந்து புறப்பட்ட போது மிகவும் சிரமப்பட்டு தான் மேலே எழும்பி பறந்து இருக்கிறது. அந்த விமானத்தை இயக்கிய ராணுவ விமானி டெல்லி சென்றதும் முதல் வேலையாக திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையை நீட்டிப்பு செய்ய வேண்டியது மிக அத்தியாவசியமான ஒன்று. இல்லையேல் அது எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கையை விமான நிலைய ஆணைய குழுமத்திடம் பதிவு செய்திருக்கிறார்.

திருச்சி விமான நிலையத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. ஏன் சென்னையில் கூட நடந்தது இல்லை என்றே கூறலாம். தொழில் நுட்ப கோளாறு அல்லது பனி, மழை உள்ளிட்ட இயற்கை சீற்றம் காரணமாக ஓடுபாதை பாதிக்கப்பட்டு இருந்த நேரங்களில் கூட மேலே பறந்த விமானம் பல நேரங்களில் அவற்றை இயக்கிய விமானிகளால் சாதுர்யமாக தரை இறக்கப்பட்டு உள்ளன. துபாயியில் இருந்து மங்களூரு வந்த விமானம் மட்டும் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி தரை இறங்கியபோது ஓடுபாதையை தாண்டி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி இறந்தனர். அதன் பின்னர் இது போன்ற பெரிய விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை.

திருச்சி- துபாய் விமானத்தின் மொத்த பயண நேரமே 3 மணி 52 நிமிடங்கள் தான். பயண தூரம் 1827 மைல்கள். சுற்றுச்சுவரை இடித்துவிட்டு சென்ற விமானமானது கூடுதலாக சுமார் ஒன்றரை மணி நேரம் பறந்து இறுதியாக செல்ல வேண்டிய துபாய்க்கும் போகாமல் மும்பையில் அதிகாலை 5.30 மணிக்கு தரை இறக்கப்பட்டு உள்ளது. 4 மணி நேரத்தில் பயணத்தை முடிக்க வேண்டிய பயணிகள் ஐந்தரை மணி நேரம் மரண பயத்தில் பயணத்தை தொடர்ந்திருக்கிறார்கள்.

விமானம் சுற்றுச்சுவரில் மோதிய உடனே அதாவது 20 நிமிடத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானியுடன் பேசி இருந்தால் விமானத்தை உடனடியாக தரை இறக்கி இருக்க முடியும். ஆனால் அதிகாரிகள் தாமதமாக தொடர்பு கொண்டு பேசுவதற்குள் விமானம் மஸ்கட் நகர எல்லைக்குள் போய்விட்டது. விமான நிலைய வளாகத்திலேயே நடந்த விபத்து பற்றி கூட விமான நிலைய அதிகாரிகளுக்கு தாமதமாக தான் தகவல் தெரிந்ததா? என்பது தற்போது எழுந்து உள்ள மிகப்பெரிய கேள்வியாகும். எதிர்காலத்தில் இதுபோன்ற பாதுகாப்பு குளறுபடி ஏற்படாமல் இருக்கும் வகையில் மத்திய குழு அதிகாரிகளின் விசாரணை அமைய வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாகும்.

Next Story