விபசாரத்திற்கு மறுத்த சிறுமியை தாக்கிய வங்காளதேச பெண் ‘போக்சோ’ சட்டத்தில் கைது


விபசாரத்திற்கு மறுத்த சிறுமியை தாக்கிய வங்காளதேச பெண் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 15 Oct 2018 3:15 AM IST (Updated: 15 Oct 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் விபசாரத்தில் ஈடுபட மறுத்த சிறுமியை தாக்கிய வங்காளதேசத்து பெண் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர், 

வேலூர் - ஆற்காடு ரோட்டில் நேற்று முன்தினம் 16 வயது சிறுமியை பெண் ஒருவர் அடித்து உதைத்தார். இதைபார்த்த பொதுமக்கள், அந்த பெண்ணிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் அவர்களை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு இருவரிடமும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் இருவரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சிறுமியை தாக்கிய பெண் முஸ்கான் (வயது 30) என்பதும், அந்த சிறுமி அவருடைய உறவினர் மகள் என்பதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து முஸ்கான் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முஸ்கான், சிறுமிக்கு வேலை வாங்கித்தருவதாகக்கூறி சித்தூர், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அழைத்து சென்றுவிட்டு வேலூருக்கு வந்துள்ளார். வேலூரில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபட வலியுறுத்தியபோது அதற்கு சிறுமி சம்மதிக்காததால் அவரை முஸ்கான் அடித்துள்ளார்.

மேலும் வங்காளதேசத்தில் இருந்து பாஸ்போர்ட் இல்லாமல் கடல் மார்க்கமாக கள்ளத்தோணியில் இந்தியாவிற்கு வந்ததாக போலீசாரிடம், முஸ்கான் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு வந்த அவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைபார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுமியை விபசாரத்தில் ஈடுபட வலியுறுத்தி அடித்ததால் அவரை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட முஸ்கானிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 

Next Story