செங்கட்டான்குண்டில் கிராமத்தில் நீரணிந்தீஸ்வரர் கோவிலில் இருந்து சிலைகளை எடுத்துச்செல்ல எதிர்ப்பு ; பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


செங்கட்டான்குண்டில் கிராமத்தில் நீரணிந்தீஸ்வரர் கோவிலில் இருந்து சிலைகளை எடுத்துச்செல்ல எதிர்ப்பு ; பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Oct 2018 3:30 AM IST (Updated: 15 Oct 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

செங்கட்டான்குண்டில் கிராமத்தில் உள்ள நீரணிந்தீஸ்வரர் கோவிலிலிருந்து சிலைகளை எடுத்துச்செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்யாறு, 


செய்யாறு தாலுகா செங்கட்டான்குண்டில் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த நீரணிந்தீஸ்வரர் கோவில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி செடி, கொடி வளர்ந்தும், கோவில் சிதிலமடைந்து மரங்கள் வளர்ந்தும் காணப்படுகிறது. கோவிலில் 30 கற்சிலைகள் உள்பட 44 சிலைகள் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறையினர் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த கோவிலில் 2 முறை சிலை திருட்டு போனதாக வந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பினர் கோவிலில் சிலை திருட்டு நடந்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பழனிசெல்வம் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மேகலாவிற்கு சிலைகள் கணக்கெடுத்து பாதுகாப்பாக திருவண்ணாமலை கோவில் அறையில் வைக்க அறிவுரை வழங்கினார்.

அதன்பேரில் நேற்று சிலைகளை எடுத்து செல்ல ஆய்வாளர் மேகலா மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அங்கு சென்று சிலைகளை எடுத்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மோரணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர். அப்போது அதிகாரிகள் சிலைகளை பாதுகாப்பாக எடுத்து சென்று திருவண்ணாமலை கோவில் பாதுகாப்பு அறையில் வைக்கிறோம். திருவிழா காலங்களில் சிலைகளை எடுத்து வரலாம் என கூறினர்.

ஆனால் பொதுமக்கள் அதனை ஏற்க மறுத்து சிலைகளை கணக்கெடுத்தும், அளந்தும், எடை போட்டும் இங்கேயே வைக்க வேண்டும், நாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டு சிலைகள் திருட்டு போகாமல் பார்த்துகொள்கிறோம் என கூறினர். இதனையடுத்து பூட்டி இருந்து கோவிலை திறந்து சிலைகளை வெளியே கொண்டு வந்து அளந்தும், எடை போட்டும், கணக்கெடுத்தும் பதிவேட்டில் பதிவு செய்து ஊர்மக்கள் பொறுப்பில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சிலைகள் வைத்து பூட்டப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story