கோவையில் இளம்பெண் கொலை வழக்கு: துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறல் - மாயமான 7 ஆயிரம் பேரின் புகைப்படத்தை வைத்து தேடியும் பயனில்லை
கோவையில் நடந்த இளம்பெண் கொலை வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். மாயமான 7 ஆயிரம் பெண்களின் புகைப்படத்தை வைத்து தேடியும் பயனில்லை.
கோவை,
கோவை செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியில் செல்வாம்பதி குளத்தில் ஜூலை மாதம் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய உடல் துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைக்குள் வைத்து குளத்தில் வீசப்பட்டு இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அத்துடன் அந்த பெண் காலில் அணிந்து இருந்த மெட்டி வடநாட்டு பெண்கள் அணிவது போன்று இருந்தது. அவர் யார்? என்பது குறித்து தெரியவில்லை.
இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலில் இருந்த சுடிதார், அவர் அணிந்து இருந்த மெட்டி ஆகியவற்றின் புகைப்படத்துடன் போலீசார் துண்டுபிரசுரம் அச்சடித்து, தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
அதுபோன்று வடமாநிலங்களுக்கும் அந்த துண்டு பிரசுரம் அனுப்பி வைக்கப்பட்டது. அதுபோன்று ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் காணாமல்போன பெண்களின் பட்டியலை சேகரித்தும் விசாரணை செய்யப்பட்டது. எனினும் அந்த இளம்பெண் குறித்து எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.
மேலும் மாநில அளவிலான குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்த மாயமான 7 ஆயிரம் பெண்களின் புகைப்படங்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதிலும் பயனில்லை என்பதால் அந்த பெண் யார் என்பது குறித்து அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே இந்த கொலை வழக்கில் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமலும், அந்த இளம்பெண் யார் என்பது குறித்து அடையாளம் காண முடியாமலும் திணறி வருகிறார்கள்.
இது குறித்து தனிப்படையை சேர்ந்த போலீசார் கூறும்போது, ‘கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவரை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் வசித்து வரும் வடமாநில தொழிலாளர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் காணாமல்போன இளம் பெண்களை வைத்தும் விசாரணை நடத்தினோம். எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
Related Tags :
Next Story