மின்சார ரெயிலில் பெண் பயணிகளை குறிவைத்து செல்போன் திருடிய இளம்பெண் கைது கூட்டாளிகள் 3 பேரும் சிக்கினர்


மின்சார ரெயிலில் பெண் பயணிகளை குறிவைத்து செல்போன் திருடிய இளம்பெண் கைது கூட்டாளிகள் 3 பேரும் சிக்கினர்
x
தினத்தந்தி 15 Oct 2018 5:00 AM IST (Updated: 15 Oct 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

மின்சார ரெயிலில் பெண் பயணிகளை குறிவைத்து செல்போன் திருடி வந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மின்சார ரெயிலில் பெண் பயணிகளை குறிவைத்து செல்போன் திருடி வந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருட்டு செல்போன் விற்று பணமாக்கிய அவரது கூட்டாளி 3 பேரும் சிக்கினர்.

செல்போன் திருட்டு

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள விரார் ரெயில் நிலையத்தில் பெண் பயணி ஒருவரின் செல்போன் திருட்டு போனது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். இதில், சம்பவத்துக்கு முன்னர் ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக பெண் ஒருவர் சுற்றி கொண்டிருந்த காட்சி அதில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில், அந்த பெண் போலீசில் சிக்கினார். விசாரணையில் அவரது பெயர் முஷ்கன் சேக் (வயது24) என்பது தெரியவந்தது. மேற்படி புகார் கொடுத்த பெண் பயணியிடம் செல்போன் திருடியதும் அவர் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடந்த 5 வருடமாக அவர் மின்சார ரெயிலில் பெண் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் திருடும் செல்போன்களை அவரது கூட்டாளிகளான சுவியான் முக்தியார்(32), அசிஃப் கான்(34) மற்றும் தன்வீர் ஷேக் (33) ஆகிய 3 பேரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் அந்த செல்போன்களை சந்தையில் விற்பனை செய்து பணமாக்கி கொடுத்ததாக தெரிவித்தார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் அவுரங்காபாத்தில் பதுங்கி இருந்த அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 10 திருட்டு செல்போன்களை கைப்பற்றினர்.

Next Story