கோவை வழியாக செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு


கோவை வழியாக செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2018 4:00 AM IST (Updated: 15 Oct 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

கோவை வழியாக விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

கோவை,

கோவை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தினமும் 40 விமானங்கள் வந்து செல்கின்றன. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், புனே ஆகிய நகரங்களுக்கு கோவையிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சிங்கப்பூர், சார்ஜா, கொழும்பு ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன.

கோவை வழியாக செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. உதாரணத்துக்கு கடந்த ஆண்டு (2017)செப்டம்பர் மாதம் கோவை வழியாக பயணம் செய்த உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 311. வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 786 என மொத்தம் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 97 பேர் பயணம் செய்துள்ளனர்.நடப்பு ஆண்டில் கடந்த மாதம் உள்நாட்டு பயணிகள் 2 லட்சத்து 19 ஆயிரத்து 899 பேரும், 17 ஆயிரத்து 485 பயணிகள் வெளிநாடுகளுக்கும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 384 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 30 சதவீத உயர்வாகும்.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சமீபகாலமாக கோவை விமான நிலையம் வழியாக பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமான சேவை அதிகரித்துள்ளது. கோவை–சென்னை இடையே தினமும் 8 விமானங்கள் சென்று வருகின்றன. இதுபோன்று மற்ற நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அடுத்து விமான கட்டணம். சில சமயங்களில் ஆம்னி பஸ் கட்டணத்தை விட விமான கட்டணம் குறைவாக உள்ளது. சில விமான நிறுவனங்கள் சலுகை கட்டணங்களை அறிவிக்கின்றன. அதன்படி கோவையிலிருந்து சென்னை செல்வதற்கு விமான கட்டணம் ரூ.ஆயிரத்து 600 தான். இது ஆம்னி பஸ் மற்றும் ரெயில் 2–ம் வகுப்பு குளு குளு வசதி கட்டணத்தை விட குறைவாகும். இதுபோன்ற சலுகை கட்டணத்தினால் விமானங்களில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்து மக்களுக்கு விமானத்தில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதின் காரணமாகவும் விமானத்தில் பறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கோவை விமான நிலையம் வழியாக கடந்த ஆண்டு 24 லட்சம் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சென்றனர். ஆனால் இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 31 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story