மகா புஷ்கர விழாவையொட்டி: தாமிரபரணியில் புனித நீராடிய அய்யப்ப பக்தர்கள் - சீவலப்பேரியில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு
தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் புனித நீராடினர். சீவலப்பேரியில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
நெல்லை,
குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையொட்டி விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் பக்தர்கள் தினமும் தாமிரபரணி ஆற்றில் கூட்டம், கூட்டமாக வந்து புனித நீராடி செல்கின்றனர்.
நேற்று 5-வது நாளிலும் ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் புனித நீராடி, ஆற்றுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
இந்த நிலையில் பாபநாசத்தில் தமிழ்நாடு அய்யப்ப சேவா சமாஜத்தை சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நேற்று அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் அய்யப்ப சுவாமி சிலைக்கு பூஜைகள் நடத்தி தாமிரபரணி ஆற்றில் நீராட்டு நடத்தினர். அய்யப்ப சுவாமி சிலையுடன் ஏராளமான அய்யப்ப பக்தர் கள் அங்கு புனித நீராடினர்.
பின்னர் பாபநாசத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு அய்யப்ப பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். இதேபோல் பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேற்று பாபநாசம் ஆற்றில் புனித நீராடி விளக்கு ஏற்றியும், ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர்.
நெல்லை
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் ஏராளமான பக்தர்கள் வரிசையாக வந்து நீராடினர். அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் மறைந்த காஞ்சி ஜெயேந்திர சரசுவதி சுவாமி ஆசி வழங்குவது போல் மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது. அதனை பக்தர் கள் வணங்கி சென்றனர்.
குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறையில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். மேலும் அவர்கள் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, குறுக்குத்துறை மேட்டில் நடைபெற்ற யாகசாலை பூஜையிலும் கலந்து கொண்டனர்.
இதேபோல் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகில் உள்ள ஜடாயு துறை மற்றும் மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் முன்பும் பக்தர்கள் புனித நீராடினர். சிந்துபூந்துறை சிப்தபுஷ்ப தீர்த்த கட்டத்திலும் ஏராளமானோர் புனித நீராடி தாமிரபரணி அன்னையை வணங்கினார்கள்.
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி துர்க்காம்பிகை கோவிலில் நேற்று காலை வைரவ ஹோமமும், வடுகு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து ஊர்வலமாக பக்தர் கள் தாமிரபரணி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கும்பம் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் 7 சிவாச்சாரியார்கள் தலைமையில் சிறப்பு தீப ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் ஆற்றில் தீபம் ஏற்றி விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.
நெல்லை அருகே மேலதிருவேங்கடநாதபுரத்தில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் சீனிவாச தீர்த்த கட்டம் உள்ளது. இங்கு தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூரி நேற்று முன்தினம் மேலதிருவேங்கடநாதபுரத்துக்கு வந்தார். அவர் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
தாமிரபரணி ஆற்றில் நேற்று வழக்கத்தைவிட குறைவாகவே தண்ணீர் ஓடியது. இதனால் தீர்த்த கட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்துக்குள் பக்தர்களால் மூழ்கி குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு சேறும், சகதியுமாக காணப்பட்டது.
இதையடுத்து மக்கள் தடுப்புகளை அகற்றிவிட்டு ஆற்றில் தண்ணீர் ஓடிய பகுதிக்குள் சென்று குளித்தனர். இதையொட்டி தீயணைப்பு துறை வீரர்களும் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி மக்கள் புனித நீராடுவதற்கு வசதியாக கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story