அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது


அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது
x
தினத்தந்தி 16 Oct 2018 4:45 AM IST (Updated: 16 Oct 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில், அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ், திருமண மண்டபம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். காலையில் இருந்து இரவு வரை நடந்த இந்த சோதனையால் மன்னார்குடியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் மனோகரன். இவர் மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் ஊராட்சி முன்னாள் தலைவராக இருந்தார். தற்போது சேரன்குளம் ஊராட்சி அ.தி.மு.க. கிளைக்கழக செயலாளராகவும், முதல்நிலை ஒப்பந்தக்காரராகவும் இருந்து வருகிறார்.

இவரது வீடு, அலுவலகம், லாட்ஜ், திருமண மண்டபம் உள்பட 6 இடங்களில் சோதனை நடத்துவதற்காக நேற்று காலை வருமானவரித்துறை திருச்சி உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் 5 வாகனங்களில் மன்னார்குடி வந்தனர். முதலில் மன்னார்குடி மீனாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள மனோகரனின் வீட்டில் சோதனையிடுவதற்காக சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

பின்னர் கீழராஜ வீதியில் உள்ள மனோகரனுக்கு சொந்தமான லாட்ஜ், பெட்ரோல் பங்க், கம்மாள தெருவில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மனோகரனுக்கு சொந்தமான நீடாமங்கலத்தில் உள்ள கான்கிரீட் கலவை தயாரிக்கும் ஆலை மற்றும் திருக்கருகாவூரில் உள்ள திருமண மண்டபம் ஆகிய இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

காலை 10 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. அலுவலகம், பெட்ரோல் பங்க், லாட்ஜ், கான்கிரீட் கலவை தயாரிக்கும் ஆலை, திருமண மண்டபம் ஆகிய இடங்களில் வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்ததுடன், அங்கிருந்த ஆவணங்களையும் சோதனை செய்தனர். இரவு 7 மணிக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.

இந்த சோதனையின்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்த இடங்களில் இருந்த ஊழியர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. சோதனையை தொடங்குவதற்கு முன்பு அங்கிருந்த ஊழியர்களின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டனர். இந்த சோதனை குறித்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றனர். ஆனால் யாரையும் அவர்கள் சந்திக்கவும் இல்லை. சோதனை நடந்த இடத்தின் உள்ளே செல்வதற்கும் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் மாலையில் கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து கூடுதலாக வருமானத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சோதனையின்போது ஏதேனும் பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காகவும், தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தஞ்சையில் இருந்து போலீசாரை உடன் அழைத்து வந்திருந்தனர்.

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தெரிகிறது. அந்த ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவத்தால் மன்னார்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story