தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை ; துணை தாசில்தாரிடம் விவரம் கேட்டறிந்தனர்


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை ; துணை தாசில்தாரிடம் விவரம் கேட்டறிந்தனர்
x
தினத்தந்தி 16 Oct 2018 3:30 AM IST (Updated: 16 Oct 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். முன்னதாக அவர்கள் துணை தாசில்தாரிடம் சம்பவம் பற்றிய விவரம் கேட்டறிந்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் 15 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் துணை சூப்பிரண்டு ரவி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு கடந்த 13-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தது. அன்று முதல் தூத்துக்குடியில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சேகரிப்பு, சம்பவம் நடந்த இடங்களை ஆய்வு செய்தல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை நடந்தது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்த துணை தாசில்தார் சேகர் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி, மே மாதம் 22-ந்தேதி முற்றுகை போராட்டத்தின்போது நடந்த சம்பவங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டறிந்தனர். பின்னர் அந்த தகவல்களை பதிவு செய்து கொண்டனர். மேலும் சம்பவத்தின்போது, பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு விசாரணைக்காக சம்மன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அதே நேரத்தில் மற்றொரு சி.பி.ஐ. அதிகாரிகள் குழு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துவதற்காக சென்றனர். அவர்கள் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான சுனோலின் உள்ளிட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பலியானவர்களின் குடும்பத்தினர், உறவினர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக துப்பாக்கி உள்ளிட்ட விவரங்களையும், பல்வேறு ஆவணங்களையும் கோர்ட்டு மூலம் பெறுவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து துப்பாக்கி சூட்டில் பலியான சுனோலின் தாய் வனிதா கூறியதாவது:-

நாங்கள் சாதாரண மக்களுடன் சேர்ந்து கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக தான் சென்றோம். போராட்டம் நடத்துவதற்காக செல்லவில்லை. இதுபோன்று சுடுவார்கள் என்று தெரிந்து இருந்தால் எங்கள் குழந்தைகளை அழைத்து சென்று இருக்க மாட்டோம். எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று சென்றோம். ஆனால் அங்கு எங்களை பழி வாங்கும் தீர்வுதான் கிடைத்தது. எனது மகளை சுட்டுவிட்டார்கள். எத்தனையோ பேர் வந்து விசாரணை செய்து விட்டார்கள். ஆனால் இதுவரை உண்மை வரவில்லை. இனிமேல் விசாரணை நடத்துபவர்கள் உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறவர்கள் ஒவ்வொருவரையும் வெளிப்படுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற போராட்டத்தில் எந்த ஒரு உயிர்சேதமும் ஏற்படாதவாறு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். தனியாக வழக்கு தொடர்ந்தால் ஏதாவது தீர்வு கிடைக்குமா? என்று தோன்றுகிறது. சி.பி.ஐ. மூலம் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். உண்மை வெளியில் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story