மெஞ்ஞானபுரம் அருகே பரபரப்பு: பஞ்சாயத்து செயலாளர் தற்கொலை - அதிகாரிகள் நெருக்கடி காரணமா? போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
மெஞ்ஞானபுரம் அருகே பஞ்சாயத்து செயலாளர் தற்கொலை செய்து கொண்டார். அவர் அதிகாரிகள் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மெஞ்ஞானபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 45). இவர் மானாடு தண்டுபத்து பஞ்சாயத்து செயலாளராக இருந்தார். இவர் கடந்த சில நாட்களாக பக்கத்து ஊரான நயினார்பத்து பஞ்சாயத்து செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
மானாடு தண்டுபத்து, நயினார்பத்து பஞ்சாயத்துகளில் கடந்த சில நாட்களாக உயர் அதிகாரிகளின் தணிக்கை ஆய்வு கூட்டம் நடந்தது. இதனால் சுந்தரம் பணிச்சுமை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் காலையில் சுந்தரம் வழக்கம்போல் தண்டுபத்து பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பணிக்கு சென்றார். பின்னர் அவர் ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் குருணை மருந்தினை (விஷம்) தின்று தற்கொலை செய்து கொண்டார். இரவில் அந்த வழியாக சென்றவர்கள், அவரது உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த சுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, சுந்தரத்துக்கு பணிச்சுமை ஏற்படுத்தி நெருக்கடி கொடுத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் சுந்தரத்தின் உடலை வாங்கிச்செல்ல மாட்டோம் என்று கூறி, அவருடைய உறவினர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்கள், மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் திருச்செந்தூர் தாசில்தார் தில்லைப்பாண்டி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் தண்டுபத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை அதிகாரிகள் மாலையில் திறந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு, சுந்தரம் எழுதி வைத்திருந்த உருக் கமானகடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில், நான் மிகவும் தாழ்வு மனப்பான்மை உள்ளவன் மற்றும் தன்னம்பிக்கை இல்லாதவன். எனக்கு நயினார்பத்து ஊராட்சி செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதில் இருந்து இந்நாள் வரை என்னால் பணி செய்ய முடியவில்லை என்று கருதி, இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் மனம் அமைதி இல்லாமல் அவதிப்படுகிறேன். இதனால் என் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே என்னை கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் இந்த முடிவு எடுத்துள்ளேன். இந்நாள் வரை ஒத்துழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்று எழுதப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சுந்தரத்தின் உடலை உறவினர்கள் இரவில் பெற்று சென்று இறுதிச்சடங்கு நடத்தினர்.
தற்கொலை செய்த சுந்தரத்துக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். மெஞ்ஞானபுரம் அருகே பஞ்சாயத்து செயலாளர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story