கும்மிடிப்பூண்டியில் மாரத்தான் ஓட்ட பந்தயம் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்


கும்மிடிப்பூண்டியில் மாரத்தான் ஓட்ட பந்தயம் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Oct 2018 4:30 AM IST (Updated: 16 Oct 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி கும்மிடிப்பூண்டியில் நடந்த மாரத்தான் ஓட்டபந்தயத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி,

தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற தொகுதியான கும்மிடிப்பூண்டியில் கடந்த சில வருடங்களாக காற்று மற்றும் நீர்நிலைகள் மாசுபட்டு காணப்படுகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சில தொழிற்சாலைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவி வருவதாகவும் பல்வேறு புகார்கள் வந்தன. இதைபோக்கிட கும்மிடிப்பூண்டி பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி கும்மிடிப்பூண்டி தாலுகாவில் பசுமை கும்மிடிப்பூண்டி, தூய்மை கும்மிடிப்பூண்டி, பாதுகாப்பு கும்மிடிப்பூண்டி ஆகிய 3 திட்டங்களை வலியுறுத்தும் வகையில் காந்தி உலக மையத்தின் சார்பில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டபந்தயத்தை கும்மிடிப்பூண்டியில் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ், பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், தாசில்தார் மதன் குப்புராஜ், நடிகர் வையாபுரி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தட்சிணாமூர்த்தி, பாலச்சந்தர், டில்லிபாபு, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தயாநிதி, ரவி, பேரூராட்சி செயல்அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாரத்தான் ஓட்டபந்தயத்தில் பெரியவர்கள், சிறுவர், சிறுமியர் உள்பட மொத்தம் 800 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், கே.எஸ்.விஜயகுமார் எம்.எல்.ஏ., நடிகர் வையாபுரி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

பின்னர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, கும்மிடிப்பூண்டி பஜாரில் மரக்கன்றை நட்டு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல், மரக்கன்று நடுதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான குறுந்தகடுகளையும் மாவட்ட கலெக்டர் வெளியிட்டு பேசினார். குறுந்தகடு படக்காட்சிகள், பொதுமக்களின் பார்வைக்காக கும்மிடிப்பூண்டி பஜாரில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு வாகனத்தில் திரையிடப்பட்டது.

பெத்திக்குப்பம் ஊராட்சியில் வெள்ளாத்துக்குளம் கரைப் பகுதியில் பனை விதைகளை விதைக்கும் பணியையும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்து, அதற்கான முகநூல் பிரேமையும் அவர் வெளியிட்டார். இதையடுத்து கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தனியார் அமைப்புகளின் சார்பில் 6 ஆயிரம் பனை விதைகள் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் விதைக்கப்பட்டன.

இது தவிர கவரைப்பேட்டை அரசு பள்ளியில் சாலை விதிகள் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குட்டி போலீஸ் ரிப்போர்ட் கார்டு என்ற திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பெற்றோர்கள் பாதுகாப்பான சாலை பயணத்தை மேற்கொள்கிறார்களா? என்பதனை அவர்களது குழந்தைகள் கண்டறிந்து அதற்குரிய பதிவு அட்டையில் பதிவிடும் முறை தமிழகத்தில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வின்போது சிறு வயது பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு காணொலி தகட்டையும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கம், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, மாசுக்கட்டுபாட்டு துறை உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story