மாவட்ட செய்திகள்

‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு + "||" + When trying to take selfi Stray College students 3 people die in the lake

‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு

‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு
பெங்களூரு அருகே ‘செல்பி‘ எடுக்க முயன்றபோது ஏரியில் தவறி விழுந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களை காப்பாற்ற முயன்ற கல்லூரி விரிவுரையாளரும் நீரில் மூழ்கி தத்தளித்தார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு, 

துமகூரு மாவட்டத்தில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு சொந்தமான கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த 10-ந் தேதி பெங்களூரு புறநகர் நெலமங்களாவுக்கு வந்தனர். அந்த மாணவ, மாணவிகள் என்.எஸ்.எஸ். முகாமிற்காக நெலமங்களாவுக்கு வந்திருந்தனர். கடந்த 10-ந் தேதியில் இருந்து நெலமங்களாவை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று அங்குள்ள ஏரி, குளங்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர். நேற்று காலையில் நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டை அருகே உள்ள தேவரஒசஹள்ளி கிராமத்திற்கு மாணவ, மாணவிகள் வந்தனர்.


அந்த கிராமத்தில் உள்ள ரேவண்ணா சித்தேஷ்வரா கோவிலுக்கு சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவில் அருகே உள்ள ஏரிக்கு மாணவர்களான பூரண சந்திரா (வயது 17), ஷசாங்(17) மற்றும் முகமது மூர்தாஜ்(16) ஆகிய 3 பேரும் சென்றனர். ஏரியின் கரைப்பகுதியில் நின்று கொண்டு 3 மாணவர்களும் செல்போன் மூலம் ‘செல்பி‘ புகைப்படம் எடுக்க முயன்றனர்.

அந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக மாணவர்கள் பூரண சந்திரா, ஷசாங், முகமது மூர்தாஜ் ஆகிய 3 பேரும் ஏரிக்குள் தவறி விழுந்தனர். அவர்கள் 3 பேருக்கும் நீச்சல் தெரியாததால் ஏரி தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி விரிவுரையாளர் சிவண்ணா ஏரிக்குள் குதித்தார். பின்னர் மாணவர்களை அவர் காப்பாற்ற முயன்றார். அதற்குள் 3 மாணவர்களும் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர்.

அதே நேரத்தில் காப்பாற்ற முயன்ற சிவண்ணா நீரில் மூழ்கி தத்தளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே கிராமத்தினர் சிலர் ஏரியில் குதித்து சிவண்ணாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர் நீரில் மூழ்கி அதிகளவு தண்ணீர் குடித்திருந்ததால் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிவண்ணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தாபஸ்பேட்டை போலீசார், நெலமங்களா துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டுரங்கா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு சென்று ஏரியில் மூழ்கிய மாணவர்கள் பூரண சந்திரா, ஷசாங், முகமது மூர்தாஜ் ஆகிய 3 பேரின் உடல்களையும் நீண்ட நேரம் போராடி மீட்டனர். அவர்களது உடல்களை பார்த்து மாணவ, மாணவிகள் கதறி அழுதனர். மாணவர்கள் செல்பி எடுக்க முயன்றபோது ஏரிக்குள் தவறி விழுந்து உயிர் இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தாபஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் தாபஸ்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியது.