சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ரேஷன்கடை ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ரேஷன்கடை ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ரேஷன்கடைகளுக்கான தனித்துறை அமைக்க வேண்டும், அனைத்து ரேஷன்கடைகளையும் முழு கணினி மயமாக்க வேண்டும். இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும், மருத்துவபடியை உயர்த்தி வழங்க வேண்டும், நுகர்பொருள் வாணிபகழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பணிவரன் முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில துணை தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துச்சாமி வரவேற்று பேசினார்.
இதில் மாவட்ட தலைவர் மாயாண்டி, பொருளாளர் திருஞானம், தியாகராஜன், தினகரன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.