கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் ராமநகர் தொகுதிக்கு அனிதா குமாரசாமி மனு செய்தார்


கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் ராமநகர் தொகுதிக்கு அனிதா குமாரசாமி மனு செய்தார்
x
தினத்தந்தி 16 Oct 2018 5:30 AM IST (Updated: 16 Oct 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 2 சட்டசபை, 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க் கிழமை) கடைசி நாளாகும்.

பெங்களூரு,

ராமநகர் தொகுதிக்கு ஜனதா தளம்(எஸ்) சார்பில் அனிதா குமாரசாமி நேற்று மனு தாக்கல் செய்தார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல்-மந்திரி குமாரசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து ராம நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்துநியாமகவுடா விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து கர்நாடக சட்டசபையில் ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய தொகுதிகள் காலியாக இருக்கின்றன.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட எம்.பி.க்களாக இருந்த எடியூரப்பா, ஸ்ரீராமுலு, புட்டராஜூ ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து கர்நாடகத்தில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க் கிழமை) கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் நேற்று பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். ஜனதா தளம்(எஸ்) சார்பில் ராமநகரில் அனிதா குமாரசாமி, மண்டியாவில் சிவராமேகவுடா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். சிவராமேகவுடா 4 முறை மனு தாக்கல் செய்தார். அந்த கட்சியின் சிவமொக்கா தொகுதி வேட்பாளர் மது பங்காரப்பா இன்று(செவ்வாய்க்கிழமை) மனு தாக்கல் செய்கிறார்.

பா.ஜனதா சார்பில் மண்டியா தொகுதியில் டாக்டர் சித்தராமையா, ராமநகர் தொகுதியில் சந்திரசேகர், சிவமொக்காவில் ராகவேந்திரா, ஜமகண்டியில் ஸ்ரீகாந்த் குல்கர்னி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பல்லாரி தொகுதியில் வேட்பாளரான ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தா இன்று மனு தாக்கல் செய்கிறார்.

காங்கிரஸ் வேட்பாளர்கள் உக்ரப்பா பல்லாரி தொகுதி யிலும், ஆனந்த் நியாமகவுடா ஜமகண்டியிலும் இன்று மனு தாக்கல் செய்கிறார்கள். மனுக் கள் மீதான பரிசீலனை நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

Next Story