மதுரையில் ஒரே நாள் இரவில் ரவுடி உள்பட 2 பேர் வெட்டிக்கொலை
மதுரையில் ஒரே நாள் இரவில் ரவுடி உள்பட 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை செல்லூர் தத்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் பெரியபாண்டி. இவரது மகன் ஹரிராஜா (வயது 25). பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் ஓட்டல் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியபாண்டி அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் இடம் ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கினார். அந்த இடத்திற்கு தொடர்பு உடையவர்கள் கூடுதல் பணம் கேட்டு ஹரிராஜாவிடம் தகராறு செய்து வந்தனர்.
நேற்று முன் தினம் இரவு ஹரிராஜா அருள்தாஸ்புரம் தண்ணீர் தொட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் ஹரிராஜாவை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி, தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்து விட்டு தப்பி விட்டனர். இது குறித்து செல்லூர் போலீசார் மாயாண்டி, சசி, நிரூபன், முத்துப்பாண்டி, ஹரி, சுகன்பாண்டி உள்ளிட்ட பலரை தேடி வருகின்றனர். இறந்த ஹரிராஜாவிற்கு பாண்டீஸ்வரி(22) என்ற மனைவியும், 2 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
மதுரை செல்லூர் கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (26), பிரபல ரவுடி. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அசோக்குமாரை வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டது. இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அசோக்குமார் மீது 2 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலில் உள்ள இவர் சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இவரும், அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி தமிழ்செல்வமும் கூட்டாளிகள். சம்பவத்தன்று அசோக்குமாரை அவரது கூட்டாளிகள் அந்த பகுதியில் கொள்ளையடிக்க அழைத்துள்ளனர். ஆனால் அவர் அவர்களுடன் செல்லாமல், தான் திருந்தி வாழ முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில் ரவுடி தமிழ்செல்வத்தின் தந்தையை வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். அவரை அழைத்து வர போலீஸ் நிலையத்திற்கு வரும்படி அசோக்குமாரை தமிழ்செல்வம் மற்றும் கூட்டாளிகள் அழைத்தனர். ஆனால் அவர் அவர்களுடன் வரமுடியாது என்று கூறி வீட்டிற்கு சென்று விட்டாராம்.
இந்த ஆத்திரத்தில் தான் தமிழ்ச்செல்வம், விஜய், சசிகுமார், கார்த்திக் உள்பட சிலர் சேர்ந்து அசோக்குமாரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
மதுரையில் ஒரே நாள் இரவில் செல்லூர் பகுதியில் மட்டும் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்துள்ளது. செல்லூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.