பொய் சொல்வது பாவம்: மக்களுக்காக நாராயணசாமி மாற வேண்டும் - கவர்னர் கிரண்பெடி அறிவுரை
கவர்னர் மாளிகையில் பண பரிவர்த்தனை நடந்ததாக பொய் சொல்வது பாவம். மக்களுக்காக முதல்–அமைச்சர் நாராயணசாமி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
சமூக பொறுப்புணர்வு நிதி வசூலித்து முறைகேடு செய்ததாக கவர்னர் கிரண்பெடி மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று பேட்டி அளித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பெடியின் செயலகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–
புதுவையில் புதர்கள் மண்டிக்கிடந்த 86 கி.மீ. நீளமுள்ள 23 கால்வாய்கள் நன்கொடையாளர்கள் மூலம் எந்திரத்தை கொண்டு தூர்வாரப்பட்டது. இதை செய்ய அரசுக்கு ரூ.10 கோடிக்கு மேல் செலவு பிடித்திருக்கும். ஆனால் அரசுக்கு ஒரு பைசாகூட செலவு இல்லாமல் சமுதாயத்தினரால் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நன்றி செலுத்தி கொண்டாடப்பட வேண்டிய தருணம்.
ஒருவேளை முதல்–அமைச்சர் இவ்வளவு பெரிய சமுதாய ஆதரவை அரசு சேவைக்காக ஒருபோதும் அனுபவத்தில் கொண்டிருக்கமாட்டார் போலும். நீண்டநாள் நீர்மிகு புதுச்சேரியாக மாற்றம் காண இது ஒரு எழுதப்படுகின்ற சரித்திரம். நன்கொடையாளர்களில் பலர் அடுத்த ஆண்டு முதல், பராமரிப்பை ஏற்றுக்கொள்ள தயாராகி வருகின்றனர். இது அவர்களுக்கு சொற்ப செலவையே தரும். இதனால் புதுச்சேரி இனி எப்போதும் நீர் மிகுந்தும் வளமாகவும், பசுமையாகவும் காணப்படும்.
இதற்காக கவர்னர் மாளிகையில் ஒருபோதும் பண பரிவர்த்தனை நடந்தது கிடையாது. ஆனால் நமது முதல்–அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கிறார். பொய் சொல்வது பாவம் என்பதை அவர் உணரவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு மாறாக நாங்கள் கவர்னர் மாளிகைக்கு வரும் பரிசு பொருட்களை ஏழைகளுக்கு தினமும் கொடுத்து வருகிறோம்.
இதில்கூட முதல்–அமைச்சர் பொய்கூறுவது வருத்தமளிக்கிறது. இவை அனைத்தும் என்னுடைய (கவர்னர்) அறிவுறுத்தலின்படிதான் நடக்கிறது. இங்கு வாங்கப்படுகின்ற தனிப்பட்ட பரிசு முதற்கொண்டு அனைத்தும் திரும்ப வெளியே வழங்கப்படுகிறது. அல்லது கலைப்பொருட்களாக பாவிக்கப்படுகிறது.
என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க 1,500 சுகாதார ஊழியர்களுக்கு நன்கொடையாளர்கள் நேரடியாக புடவைகள் வழங்கினார்கள் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். நான்கொடையாளர்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவ தயாராக உள்ளனர். கவர்னரை சந்திக்க வருபவர்களில் பலர் உதவ முன்வருகின்றனர். கவர்னர் மாளிகை தேவையாளர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் ஒரு இணைப்பு பாலமே. பணபரிவர்த்தனை இங்கு ஒருபோதும் கிடையாது.
கிராமங்களில் கணினி மையம் ஏற்படுத்துவது, நூலகம் அமைப்பது, குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மற்றும் அகராதிகள், புத்தகங்கள், பென்சில்கள், மிதியடி, சீருடை மற்றும் குப்பை கூடைகள் வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைப்பது உள்ளிட்டவைகளையும் சேவையாக செய்து வருகிறோம்.
சிறைச்சாலை சீர்திருத்தங்கள் அனைத்தும் அரசு சாரா நிறுவனங்கள் வாயிலாகவே நன்கொடையாளர்களின் சொந்த செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு சிறந்த சமூக சேவையாக கருதப்படுகிறது. அரசின் நிதிப்பற்றாக்குறையை போக்க இது ஒரு சிறந்த வழியாக விளங்குகிறது. பொருளாதாரம் படைக்க பெற்றவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கி வாடுபவர்களுக்கும் இடையே கவர்னர் மாளிகை தொடர்ந்து ஒரு பாலமாகவே செயல்படும்.
ஒருவேளை சமுதாயமும், அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ஒரு நேர்மறை சேவைக்கான கலாசார சந்தர்ப்பத்தை கடந்த கால அனுபவத்தில் முதல்–அமைச்சர் பெற்றிருக்கமாட்டார் போலும். இதை அவர் கற்றுக்கொள்ள இன்னும் இது காலதாமதமில்லை.
முதல்–அமைச்சர் அவருடைய மக்களுக்காக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டி வாழ்த்துகிறேன். அது ஒரு நல்ல காரியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.