அரசூர் அருகே மாட்டுவண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; மாணவி பலி


அரசூர் அருகே மாட்டுவண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; மாணவி பலி
x
தினத்தந்தி 16 Oct 2018 3:15 AM IST (Updated: 16 Oct 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

அரசூர் அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவெண்ணெய்நல்லூர், 

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசபாபு. இவரது மகள் சாய்மானஷா (வயது 20). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பென்திலீப்(30) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கேரள மாநிலம் மூணாறு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.
அதன்படி சாய்மானஷா, பென்திலீப் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் மூணாறு நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பென்திலீப் ஓட்டினார்.

நள்ளிரவு 1 மணியவில் விழுப்புரம் மாவட்டம் அரசூர் அடுத்த திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது, பென்திலீப் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக எதிரே வந்த கொண்டிருந்த மாட்டு வண்டி மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாய்மானஷா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பென்திலீப் படுகாயமடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய பென்திலீப்பை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே விபத்தில் பலியான சாய்மானஷாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story