‘சாரண இயக்கத்தில் மாணவர்கள் சேர்ந்து விருதுகள் பெற வேண்டும்’ அமைச்சர் தங்கமணி பேச்சு


‘சாரண இயக்கத்தில் மாணவர்கள் சேர்ந்து விருதுகள் பெற வேண்டும்’ அமைச்சர் தங்கமணி பேச்சு
x
தினத்தந்தி 16 Oct 2018 4:15 AM IST (Updated: 16 Oct 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

சாரண இயக்கத்தில் மாணவ, மாணவிகள் சேர்ந்து பணியாற்றி பல்வேறு விருதுகளை பெறவேண்டும், என அமைச்சர் தங்கமணி பேசினார்.

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து நடத்திய சர்வதேச பெண் குழந்தைகள் தினம் மற்றும் சாரண இயக்க மாநில விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு விருதுகள் வழங்கி பேசியதாவது:-

நமது மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்து விளங்குகின்ற மாவட்டமாகும். நமது மாவட்டத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 819 பெண்குழந்தைகள் என்றிருந்த பாலின விகிதம் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தற்போது 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண்குழந்தைகள் என்றவாறு உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டு காலத்திற்குள் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,000 பெண் குழந்தைகள் என்ற சதவிகித நிலை அடையப்படும்.

சாரண இயக்கத்தில் பணியாற்றுவோர் அதிக ஈடுபாட்டுடன் பல்வேறு வகையில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து, சமுதாய சேவை மனப்பான்மையினை ஏற்படுத்தி வருகின்றார்கள். கிராம பள்ளிகளை தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான கல்வி உதவிகள் மற்றும் தூய்மைபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக செயல்படுத்தி பள்ளியினை முன்னிலைப்படுத்தி வருகின்றார்கள்.

சாரண இயக்க மாணவர்கள் பள்ளிகளில் நடத்தப்படும் விழாக்களில் முன்னின்று சிறப்பான தூய்மை பணி மற்றும் பாதுகாப்பினை ஏற்படுத்துகின்றனர். இன்றைய தினம் 65 பள்ளிகளை சேர்ந்த சாரண இயக்கத்தினர் வருகை புரிந்துள்ளனர். இவ்வியக்கத்தில் மேலும் பல மாணவ, மாணவிகள் இணைந்து சிறந்த பணியாற்றி பல்வேறு விருதுகளை பெறவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.

விழாவில் ‘பெண் குழந்தைகளை காப்போம்’, ‘பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டது.

விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, உதவி கலெக்டர் வெ.பாஸ்கரன், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி, முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.அன்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் பத்மாவதி, பாரத சாரண, சாரணீயம் மாவட்டப்பயிற்சித் திடல் செயலாக்க குழுமம் தலைவர் டாக்டர் கே.எஸ்.ரங்கசாமி, முனைவர் எஸ்.குணசேகரன், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story