குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவரை பிடிக்க வந்த ஆந்திர மாநில போலீசார் 5 பேர் மீது கிராம மக்கள் தாக்குதல் : வேலூர் அருகே பரபரப்பு
குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவரை பிடிக்க, வேலூர் அருகே உள்ள மேல குப்பம் கிராமத்துக்கு வந்த ஆந்திர போலீசாரை, அக்கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆற்காடு,
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தர்மாவரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் ராமகிருஷ்ணன் (வயது 34) என்பவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரை, தர்மாவரம் போலீசார் தேடி வந்தனர். அவர், தமிழகத்துக்கு தப்பி வந்து வேலூர் அருகே உள்ள மேலகுப்பம் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தர்மாவரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ராமகிருஷ்ணனை தேடி, தர்மாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் சாதாரண உடையில் நேற்று வேலூருக்கு வந்தனர். காரில் வந்த அவர்கள், ராமகிருஷ்ணனை பிடிக்க மேலகுப்பம் கிராமத்துக்கு நேற்று மாலை சென்றனர்.
அங்கு, பதுங்கியிருந்த ராமகிருஷ்ணனை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர் தப்பியோடினார். அவரை, ஆந்திர மாநில போலீசார் விரட்டிச் சென்றனர். ராமகிருஷ்ணன் ஓட, அவரை விரட்டிச் சென்று ஆந்திர போலீசாரும் ஓடினர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மேலகுப்பம் கிராம மக்கள், சாதாரண உடையில் வந்த ஆந்திர போலீசார் 5 பேரை பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள், நாங்கள் ஆந்திர போலீசார் எனக் கூறினர். எனினும், அவர்கள் கூறியதை நம்பாத கிராம மக்கள் மீண்டும் அவர்களை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
மேலும் இதுகுறித்து ரத்தினகிரி போலீசாருக்கு மேலகுப்பம் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 5 பேரும் ஆந்திர மாநில போலீசார் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களை மீட்டும், ராமகிருஷ்ணனை பிடித்தும் ரத்தினகிரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story