கொண்டலாம்பட்டி அருகே: குடும்ப தகராறில் மாமியார் தற்கொலை - மருமகளும் விஷம் குடித்தார்
கொண்டலாம்பட்டி அருகே குடும்ப தகராறில் மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மருமகளும் விஷம் குடித்து மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொண்டலாம்பட்டி,
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரியபுத்தூர் செட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம், சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (வயது 50). இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகன் சுரேஷ். இவருடைய மனைவி சரஸ்வதி(33). இவர்கள் இருவரும் அதே பகுதியில் தனிக்குடித்தனமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமியார் சாந்திக்கும், மருமகள் சரஸ்வதிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் இருவரும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். ஆனால் இந்த தகராறை மகன் சுரேஷ் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சாந்தி, தன்னை மருமகள் திட்டுவதை மகன் தட்டிக்கேட்கவில்லையே என மனம் உடைந்து தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே சரஸ்வதி, தன்னிடம் தகராறில் ஈடுபட்ட மாமியார் தற்கொலை செய்து கொண்டாரே? தம்மை அனைவரும் திட்டுவார்களே என மனம் உடைந்தார். இதனால் அவரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
வாயில் நுரைதள்ளிய படி மயங்கி கிடந்த சரஸ்வதியை மீட்டு அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே இறந்த சாந்தியின் பிணத்தை கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தில் தகராறு காரணமாக மாமியார், மருமகள் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story