ஈரோட்டில் நிதி நிறுவனம், பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி ; பணத்தை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் முகவர்கள் மனு


ஈரோட்டில் நிதி நிறுவனம், பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி ; பணத்தை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் முகவர்கள் மனு
x
தினத்தந்தி 16 Oct 2018 3:00 AM IST (Updated: 16 Oct 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் முகவர்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு, 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

மதுரையை தலைமையிடமாக கொண்டு ‘டிஸ்க் அக்ரோ டெக்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, ஆண்டுதோறும் என பல்வேறு திட்டங்கள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து தவணை முறையில் பணம் வசூலிக்கப்பட்டது. மேலும், நிரந்தர வைப்புத்தொகை திட்டங்களும் உண்டு. இந்த நிறுவனத்தில் நாங்கள் முகவர்களாக பணியாற்றினோம். ஈரோட்டில் அதன் கிளை நிறுவனம் செயல்பட்டு வந்தது.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் முகவர்களாக சேர்ந்தோம். கடந்த 2015-ம் வரை பணப்பலன்களை பெற்று வந்தோம். அதன்பிறகு பொதுமக்கள் செலுத்திய பணத்திற்கு பணப்பலன் தராமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 12 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பணத்தை கொடுத்த பொதுமக்கள் முகவர்களாகிய எங்களிடம் பணம் கேட்டு மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு பொதுமக்களிடம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு பெரியசேமூர் கன்னிமார் நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆழ்துளை கிணறு மூலமாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடுகிறது. எனவே அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக வருவாய்த்துறை உத்தரவின்பேரில் பரிசல் இயக்கப்படவில்லை. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊஞ்சலூர், கொடுமுடி ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடிவதில்லை. அதுபோல் அந்த பகுதியை சேர்ந்த மக்களும் எங்கள் பகுதிக்கு வர சிரமமாக உள்ளது. இதற்காக சோழசிராமணி அல்லது வேலூர் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே காவிரி ஆற்றில் கூட்டு பரிசல் இயக்க அனுமதி அளிக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.

சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் ஊராட்சி தாசரிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “கொமாரபாளையம் ஊராட்சிக்கு சொந்தமான பெருமாள் கோவில்ரோடு கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் வழியாக விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லவும் என அனைத்து தரப்பு மக்களும் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அங்கு தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.

அந்தியூர் சலவை தொழிலாளர் சங்கம், சவர தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், “அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 255 மனுக்களை கொடுத்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story