அந்தியூர், தாளவாடி பகுதியில் கனமழை: வனக்குட்டை-தடுப்பணைகள் நிரம்பின மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்தது
அந்தியூர், தாளவாடி பகுதியில் பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள வனக்குட்டை மற்றும் தடுப்பணைகள் நிரம்பின. மேலும் அந்தியூர் பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்தது.
அந்தியூர்,
அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அந்தியூர் வட்டக்காடு பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 45) என்பவரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. இதில் அந்த தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் அந்த மரத்தின் மேல் பகுதி முறிந்து விழுந்தது.
இதேபோல் எண்ணமங்கலம், கோவிலூர், பர்கூர் மலைப்பகுதி மற்றும் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டைகள் நிரம்பின. மேலும் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் மட்டும் 37.2 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. இதன்காரணமாக வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2 அடி அதிகரித்து 27.26 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 33.30 அடி ஆகும்.
தொடர்ந்து மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் அதிகஅளவு வந்து கொண்டு இருப்பதால் வரட்டுப்பள்ளம் அணை அதன் முழுக்கொள்ளளவை விரைவில் எட்ட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ஓடைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதி மற்றும் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. தாளவாடி அருகே உள்ள கனகதாசர் வீதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
தாளவாடியில் பெய்த கனமழையினால் அங்குள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு பயிரிடப்பட்ட உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைகோஸ் போன்ற பயிர்கள் மூழ்கின. தாளவாடி வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைகள் அனைத்தும் நிரம்பின.
இதேபோல் சூசைபுரம், திகனாரை, காளிதிம்பம், தொட்டாபுரம், கெட்டவாடி, பாரதிபுரம், மாவள்ளம், கேர்மாளம், நெய்தாளபுரம், ஆசனூர், கோடிபுரம், தலமலை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
இதனால் அந்தப்பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வனக்குட்டைகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இந்த தண்ணீர் அனைத்தும் கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கு சென்றது.
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கவுந்தப்பாடி - 42
வரட்டுப்பள்ளம் - 37.2
தாளவாடி - 24
சென்னிமலை - 17
மொடக்குறிச்சி - 16
கோபிசெட்டிபாளையம் - 10
கொடுமுடி - 5.6
பெருந்துறை - 4.5
ஈரோடு - 2
பவானிசாகர்,
கொடிவேரி - 1.2
சத்தியமங்கலம் - 1
Related Tags :
Next Story