கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால் : கலெக்டர், வருவாய் அதிகாரி கார்களை ஜப்தி செய்ய முயற்சி
ஆண்டியப்பனூரில் அணை கட்ட கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால் வேலூர் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரியின் கார்கள் மற்றும் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்,
வாணியம்பாடியை அடுத்த ஆண்டியப்பனூரில் அணை கட்டுவதற்காக கடந்த 2000, 2001-ம் ஆண்டுகளில் 330 பேரிடம் இருந்து 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில், 140 ஏக்கர் நிலத்தில் அணையும், 60 ஏக்கர் நிலத்தில் நீர் பாசன கால்வாய், சாலை மற்றும் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இழப்பீடாக வழங்கப்பட்டது.
ஆனால் அரசு வழங்கிய இழப்பீடு தொகை போதாது என்றும், கூடுதலாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் நிலம் கொடுத்தவர்கள் திருப்பத்தூர் சப்- கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து, மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு நிலம் கொடுத்தவர்கள் தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி திருப்பத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த 2013-ம் ஆண்டு வேலூர் நில ஆர்ஜித சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2015-ம் ஆண்டு விசாரித்த நீதிபதி, நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் என கையகப்படுத்தப்பட்ட மொத்த நிலத்திற்கும் ரூ.40 கோடி இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நில ஆர்ஜித சிறப்பு கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ராஜூ, நிலத்துக்கு உரிய இழப்பீடு கடந்த 3 ஆண்டுகள் வழங்காததால் அதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.60 கோடிக்கு, மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர் கார்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கம்யூட்டர்கள் மற்றும் அனைத்து பொருட்களையும் ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் கோர்ட்டு அமீனா மற்றும் ஊழியர்கள் ஜப்தி உத்தரவு நகலுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த கலெக்டர், வருவாய் அலுவலர் கார்களை ஜப்தி செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அங்கு வந்து கோர்ட்டு ஊழியர்களிடம் ஜப்தி தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசும்படி கூறினர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி பார்த்திபனிடம் அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர் அங்கு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சமரசம் ஏற்பட்டது.
நிலம் கொடுத்தவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ரவிக்குமார் கூறுகையில், இதுகுறித்து சென்னையில் உள்ள உயர்அதிகாரிகளுக்கு தெரிவித்து ஒரு மாத காலத்தில் 50 சதவீத இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மீதமுள்ள தொகையை அடுத்தகட்டமாக வழங்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தெரிவித்தார். அதன்பேரில் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது” என்றார்.
இந்த சம்பவத்தில் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story