பாபநாசத்தில் அய்யா வைகுண்டர் மாநாடு: ‘சிந்து சமவெளிக்கு முன்பே தோன்றியது, தாமிரபரணி நதிக்கரை நாகரிகம்’ பாலபிரஜாபதி அடிகளார் பேச்சு
சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்பே தோன்றியது தாமிரபரணி நதிக்கரை நாகரிகம் என்று பாபநாசத்தில் நடந்த அய்யா வைகுண்டர் மாநாட்டில் பாலபிரஜாபதி அடிகளார் பேசினார்.
விக்கிரமசிங்கபுரம்,
சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்பே தோன்றியது தாமிரபரணி நதிக்கரை நாகரிகம் என்று பாபநாசத்தில் நடந்த அய்யா வைகுண்டர் மாநாட்டில் பாலபிரஜாபதி அடிகளார் பேசினார்.
அய்யா வைகுண்டர் மாநாடு
அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் தாமிரபரணி புஷ்கர விழாவின் 6–ம் நாளான நேற்று பாபநாசத்தில் அய்யா வைகுண்டர் அகில திரட்டு அம்மாணை மாநாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு அய்யா வழி ஆதின கர்த்தர் பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். அகில பாரத துறவியர்கள் சங்க செயலாளர் சுவாமி ரமானந்தா, குரு பால ஜனாதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குரு ஜனா யுகேந்த் வரவேற்றார்.
மாநாட்டில் பாலபிரஜாபதி அடிகளார் பேசியதாவது:–
நாட்டிலே மிகவும் தொன்மை வாய்ந்த மொழி தமிழ் மொழி. அந்த தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகஸ்தியர் வாழ்ந்து கொண்டிருக்கும் பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணிக்கு புஷ்கர விழா எடுப்பது நமக்கு சந்தோஷத்தை கொடுக்கக்கூடியதாகும். நாகரீகம் உருவாகிய நாடாக சொல்லப்படும் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் தமிழ் பெயர்கள் பல உள்ளன. எல்லோருக்கும் முந்திய நாகரீகம் நம் தமிழ் நாகரீகம்.
உண்மைகள் மறைக்கப்படுகிறது
மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் நமது திராவிட நாகரீகம் இருந்துள்ளது. கீழடியில் முறையான ஆய்வு நடத்தப்பட்டால் வரலாறு தோற்றுவிடும். மறைக்கப்பட்ட வரலாறு தெரிந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஈராக், பாகிஸ்தான், ஹரப்பா போன்ற நாடுகளில் தமிழில் பெயர்கள் உள்ளன. இப்பெயர்களை இன்றளவும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை வைத்து பார்க்கும் போது கங்கை, காவிரியில் நமது நாகரீகம் பிறக்கவில்லை. அகஸ்தியரால் உருவாக்கப்பட்ட பொருநை நதியான தாமிரபரணியில் சித்தர்களால் நாகரீகம் உருவாக்கப்பட்டு அவர்களின் மூலம் பல நாடுகளுக்கு சென்றுள்ளது. இந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டு வருகிறது.
சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்பு தோன்றிய நாகரீகம் நம் தாமிரபரணி நதிக்கரை நாகரீகம். இவற்றை தெரிந்து கொள்ள இதுபோன்ற மாநாடு நமக்கு உதவுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் குரு பிரசாந்த், அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜன், ரோஸ், செல்வராஜ் மற்றும் தூத்துக்குடி பொன்ராஜ், சிங்கையாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story