நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை தாசில்தார் மீது புகார்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை தாசில்தார் மீது புகார்
x
தினத்தந்தி 17 Oct 2018 3:00 AM IST (Updated: 16 Oct 2018 7:47 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு தாசில்தார் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு தாசில்தார் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பாலியல் தொல்லை 

நான் கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் தட்டச்சராக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வந்தேன். என்னுடைய கணவரின் குடும்பத்தாரால் ஏற்பட்ட வரதட்சணை கொடுமையால் தீக்காயம் ஏற்பட்டு உடல் ஊனம் ஏற்பட்டது. கடந்த 2015–ம் ஆண்டு கருணை அடிப்படையில் எனக்கு இந்த வேலை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நான் பணிபுரியும் அலுவலகத்துக்குரிய தாசில்தார் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் என்னை வேலைக்கு வரச்சொல்லி பாலியல் தொந்தரவுகள் செய்தார். இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளானேன். இதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வேலையில் இருக்க முடியும், இல்லையென்றால் வேலையை விட்டு நிறுத்தி விடுவதாக மிரட்டினார்.

கலெக்டரிடம் புகார் 

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதற்காக 2 நாட்கள் விடுப்பு எடுத்திருந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட தாசில்தார் என்னை பணியில் இருந்து நீக்கியதாக கூறி வேறு நபர்களை பணியில் அமர்த்தி உள்ளார்.

இதுதொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்துள்ளேன். மேலும் முதல்–அமைச்சர் அலுவலகம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்துக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மீண்டும் எனக்கு பணி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரி விளக்கம் 

இதுபற்றி தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை தாசில்தார் கந்தசாமி அந்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்பதற்காக வந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘புகார் அளித்து இருக்கும் பெண் சரியாக வேலைக்கு வருவதில்லை என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் புகார் அளித்து இருப்பார். அவரது புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றார்.

பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் சமபவங்கள் தற்போது வெளியாகி வருகிற நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு தாசில்தார் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story