சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி ஆணையரை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை
நிலுவையில் உள்ள சம்பள பணத்தை வழங்கக்கோரி 500–க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஆவடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆவடி,
ஆவடி நகராட்சியில் 48 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 500–க்கும் மேற்பட்ட ஆண், பெண் துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுபற்றி நகராட்சி ஆணையர் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் சரிவர வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை நிலுவையில் உள்ள சம்பள பணத்தை வழங்கக்கோரி, 500–க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஆவடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆணையர் ஜோதிகுமார் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவரையும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர், தொழிலாளர்களிடம் தெரிவித்தார். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் முழுவதுமாக வேலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.