திருவள்ளூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திருவள்ளூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2018 4:15 AM IST (Updated: 17 Oct 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரன், நிர்வாகிகள் நந்தகோபால், விஸ்வநாதன், வெங்கடேசன், ஸ்டாலின், தணிகைவேல்ராஜன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் பூபாலன், மாவட்ட தலைவர் நித்தியானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

 இதில் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு 2017–18–ம் ஆண்டுக்கான போனஸ் 20 சதவீதம், கருணைத்தொகை 20 சதவீதம் சேர்த்து 40 சதவீதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் விற்பனை பணத்தை நிர்வாகமே நேரடியாக வந்து கடையில் வசூலிக்க ஏற்பாடு செய்யவேண்டும், டாஸ்மாக் அலுவலகங்களில் காலியாக உள்ள பிரிவுகளில் கடை ஊழியர்கள் பயன்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணியின்போது மரணம் அடைந்த ஊழியர்களது குடும்பத்தினர், வேலையை விட்டு சென்ற ஊழியர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடை ஊழியர்களின் மருத்துவ சிகிச்சைக்கான செலவினத்தை காலதாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story