கள்ளக்குறிச்சி பகுதியில் பரவலாக மழை: மின்னல் தாக்கி 2 பேர் பலி


கள்ளக்குறிச்சி பகுதியில் பரவலாக மழை: மின்னல் தாக்கி 2 பேர் பலி
x
தினத்தந்தி 17 Oct 2018 3:15 AM IST (Updated: 17 Oct 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி, 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதியில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மதியம் 2 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டன.

பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ¾ மணி நேரம் நீடித்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதேபோல் மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம், தியாகதுருகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதியில் மின்னல் தாக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கள்ளக்குறிச்சி அருகே உள்ள அகரகோட்டாலத்தை சேர்ந்தவர் அங்கமுத்து மகன் நேரு (வயது 32), தொழிலாளி. இவரது மனைவி அலமேலு. நேரு நேற்று அதே பகுதியில் உள்ள விளை நிலத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதையடுத்து நேரு வயலில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது திடீரென நேரு மீது மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரது குடும்பத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்டு பதறியடித்துக் கொண்டு வந்த அவரது குடும்பத்தினர் நேருவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார், மின்னல் தாக்கி பலியான நேருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர் அருகே உள்ள காடியார் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன்(50). இவர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மனைவி ருக்மணி(53), ராதாகிருஷ்ணன் மனைவி நல்லம்மாள்(50) ஆகியோருடன் நேற்று மாலை அதேஊரில் உள்ள வயல்வெளி பகுதியில் பசுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. உடனே 3 பேரும் வயலின் அருகே உள்ள ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றனர். அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் கணேசன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ருக்மணி, நல்லம்மாள் ஆகியோர் காயமடைந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் மின்னல் தாக்கியதில் அங்கு மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த ஒரு பசுமாடும் செத்தது. இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்னல் தாக்கியதில் காயமடைந்த ருக்மணி, நல்லம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே மின்னல் தாக்கிய பலியான கணேசன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தியாகதுருகம் அருகே உள்ள வடதொரசலூரை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று அதே பகுதியில் விளை நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அந்த பசு மாடு செத்தது.

Next Story