பந்தலூர் அருகே : சாலையில் உலா வந்த காட்டுயானை தொழிலாளர்களை துரத்தியதால் பரபரப்பு


பந்தலூர் அருகே : சாலையில் உலா வந்த காட்டுயானை தொழிலாளர்களை துரத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Oct 2018 10:00 PM GMT (Updated: 16 Oct 2018 8:00 PM GMT)

பந்தலூர் அருகே சாலையில் உலா வந்த காட்டுயானை தொழிலாளர்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா ஏலமன்னாவில் இருந்து மேங்கோரேஞ்சு வழியாக உப்பட்டிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். 

மேலும் தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு அந்த சாலையில் ஒரு காட்டுயானை உலா வந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

அப்போது சிலர் தங்களது வாகனங்களில் ஒலி எழுப்பி காட்டுயானையை விரட்ட முயன்றனர். இதனால் திடீரென ஆவேசமடைந்த காட்டுயானை வாகனங்களை தாக்க முயன்றது. உடனே டிரைவர்கள் தங்களது வாகனங்களை பின்னோக்கி இயக்கி தாக்குதலில் இருந்து தப்பினர்.

மேலும் அந்த வழியாக வந்த தோட்ட தொழிலாளர்களையும் காட்டுயானை துரத்தியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர். அதன்பின்னரும் ஆவேசம் குறையாத காட்டுயானை சாலையோரத்தில் உள்ள மண் திட்டுகளை தந்தத்தால் இடித்து தள்ளியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

அதன்பிறகு சிறிது நேரத்தில் அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்குள் காட்டுயானை சென்றது. இதையடுத்து அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. காட்டுயானை நடமாட்டம் குறித்து தேவாலா வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

அதன்பேரில் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருந்த அந்த காட்டுயானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story