ஆயுத பூஜையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்வு ; ஒரு கட்டு ரூ.800-க்கு விற்பனை


ஆயுத பூஜையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்வு ; ஒரு கட்டு ரூ.800-க்கு விற்பனை
x
தினத்தந்தி 16 Oct 2018 9:45 PM GMT (Updated: 16 Oct 2018 8:06 PM GMT)

ஆயுத பூஜையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்ந்து உள்ளது. ஒரு கட்டு ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டி,

தமிழ்நாடு முழுவதும் நாளை(வியாழக்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் உபயோக பொருட்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்வது வழக்கம். பின்னர் சிறப்பு பூஜை செய்து சாமியை வழிபட்டு, வாகனங்களுக்கு சந்தனம் வைத்து மாலை அணிவிப்பார்கள். இந்த பூஜையில் வாழைக்கன்று, மா இலை, பூக்கள் மற்றும் கரும்பு இடம் பிடிக்கும்.

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், ஆயுத பூஜைக்கு தேவையான கரும்பு, வாழைக்கன்று மற்றும் பூக்களை விளைவிக்க முடியாது. இதனால் ஆண்டுதோறும் சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு அவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஊட்டி மலைப்பிரதேசமாக இருப்பதால், கரும்பு, வாழைக்கன்று உள்ளிட்டவைகளை சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வர கூடுதல் செலவாகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் டீசல், பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்வதால், லாரிகளில் பொருட்களை கொண்டு வருவதற்கான வாடகை அதிகரித்து உள்ளது.

இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விலை மேலும் உயர்ந்து இருக்கிறது. ஊட்டி நகரில் கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.40 முதல் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஆயுத பூஜையையொட்டி ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் இருந்து 4 லாரிகளில் கரும்புகள் ஏற்றப்பட்டு நேற்று ஊட்டிக்கு கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊட்டி நகரின் சுற்றுப்புற பகுதிகளுக்கு சரக்கு வாகனங்களில் கரும்புகள் விற்பனைக்கு எடுத்து செல்லப்பட்டன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

நடப்பாண்டு போதிய அளவு பருவமழை பெய்ததால் கரும்பு வரத்து அதிகரித்து உள்ளது. ஒரு கரும்பு ரூ.50 முதல் ரூ.60 வரைக்கும், ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஊட்டியில் கரும்பு விலை உயர்ந்து இருக்கிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் கரும்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கரும்பு விற்பனை களை கட்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story