கடந்த 9 மாதங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,600 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கடந்த 9 மாதங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,600 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு 1,422 ரேஷன் கடைகள் மூலம் மானிய நிலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்கள் கேரள மாநிலத்துக்கு கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதை தடுக்க கலெக்டர் ஹரிகரன் உத்தரவின்பேரில் வழங்கல்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ஒவ்வொரு தாலுகா அளவிலும் பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கடந்த 9 மாதங்களில் மட்டும் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,600 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 510 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 214 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அதிக பட்சமாக கடந்த மார்ச் மாதத்தில் 28 டன் அரிசியும், மே மாதத்தில் 24 டன் அரிசியும், ஜனவரி மாதத்தில் 20 டன் அரிசியும் பிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story