புதுச்சேரி மாநிலத்தில் 80 ஏரிகளில் மணல் அள்ள அரசு அனுமதி
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 84 ஏரிகளில் மணல் அள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி,
புதுவை அரசு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காக பொதுப்பணித்துறையின் கீழ் வரும் நீர்பாசன கோட்டத்தில் உள்ள 80 ஏரிகளில் இருந்து மணல் எடுக்க அனுமதி வழங்கி உள்ளது.
இந்தநிலையில் புதுவை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் புதுவை கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி தலைமையில் ஏரிகளில் மணல் அள்ளுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், ஏரிகளில் மணல் எடுப்பதற்கான அனுமதியை சப்–கலெக்டர்களை அணுகி அதற்கான உரிய தொகையை செலுத்தி பொதுப்பணித்துறையின் வழிகாட்டுதலின்படி ஏரி மணலை எடுத்துக்கொள்ளலாம். அதற்காக டயர் வண்டிக்கு ரூ.50–ம், டிராக்டருக்கு ரூ.100–ம், லாரிக்கு ரூ.150–ம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுவையில் உள்ள மொத்தம் 84 ஏரிகளில் கனகன் ஏரி, ஊசுட்டேரி, கீழ்பரிக்கல்பட்டு ஏரி மற்றும் மேல்பரிக்கல்பட்டு ஆகிய 4 ஏரிகளில் மணல் அள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதாக என தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறுகையில், ‘விவசாய நிலத்திற்கு பயன்படுத்த ஏரிகளில் எடுக்கப்படும் வண்டல் மண்ணை இலவசமாக வழங்க வேண்டும். மேலும் டயர் வண்டிக்கு மணல் அள்ள கட்டணம் வசூலிக்க கூடாது, டிராக்டரில் மணல் அள்ள விதிக்கப்பட்ட கட்டணத்தை ரூ.100–ல் இருந்து ரூ.50 ஆக குறைக்க வேண்டும்’ என்றனர்.
இந்த கூட்டத்தில் துறை செயலர் தேவேஷ் சிங், சப்–கலெக்டர்கள் உதயக்குமார், தில்லைவேல், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் தாமரைபுகழேந்தி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், புதுவை ஏரிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.