மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா? போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா? போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 17 Oct 2018 3:30 AM IST (Updated: 17 Oct 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி நேரில் ஆய்வு செய்தார்.

தளி, 


உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், செந்நாய், உடும்பு, ஓநாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அத்துடன் கோடந்தூர், ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், கரட்டுபதி, பொறுப்பாறு உள்ளிட்ட செட்டில்மெண்ட் பகுதிகளில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் இருப்பதாக கூறப்பட்டது. அப்போது அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மலைவாழ் மக்களை மையமாக கொண்டு ஊடுருவலை தீவிரப்படுத்த உள்ளதாகவும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி உள்ளார்களா? என்பதை ஆய்வு செய்யவும், ஊடுருவலை தடுப்பதற்காகவும் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் மேற்பார்வையில் தடுப்பு படை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த படையினர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது செட்டில்மெண்டில் வசித்து வருகின்ற மலைவாழ் மக்களிடையே தடுப்பு படையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அத்துடன் வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு மலைவாழ் மக்களுக்கு தடுப்புபடையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற மாவோயிஸ்டு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி அதிரடிப் படையினருடன் நேற்று ஆய்வு செய்தார். ஈசல்தட்டு பகுதியில் ஆய்வு பணியை மேற்கொண்ட அவர் மலைவாழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்வின்போது நக்சலைட்டுகள் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ரமணன், தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவி மற்றும் அய்யாசாமி தனிப்பிரிவு போலீசார் ராஜ்கபூர், மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story